ரிட்டையர்டு ஆகியும் சிஎஸ்கே-ல பிராவோ இருக்க காரணமாக இருந்த தோனியின் அந்த ஒரு போன் கால்!

0
3323
Bravo

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக வெற்றிகரமான வீரர்களின் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் டிஜே பிராவோ!

2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட டிஜே பிராவோ 2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடினார். அடுத்த இரண்டு ஆண்டுகள் குஜராத் லயன்ஸ் அணிக்கு விளையாடினார். மீண்டும் 2018 திரும்பி வந்து கடந்த ஆண்டு வரை விளையாடி ஓய்வு பெற்றார்.

- Advertisement -

தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இவர் தொடர்ந்து வருகிறார். நேற்று தமது அணி குறித்தும், வீரர்கள் குறித்தும, தமது பணி குறித்தும் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான தகவல்களைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.

டிஜே பிராவோ அதில் குறிப்பிட்டிருப்பதாவது “எங்கிருந்து தொடங்குவது! ஒரு வருடத்திற்கு முன்பு நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தபோது அதுஒரு சோகமான தருணம். அதே சமயத்தில் நான் வெற்றிகரமான ஐபிஎல் வாழ்க்கைக்கு நன்றி உள்ளவனாக இருந்தேன்.

அந்த நேரத்தில் விதியின்படி எனக்கு மகேந்திர சிங் தோனி மற்றும் பிளமிங் இடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் என்னைப் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு அங்கமாக இருக்க அழைத்தார்கள். எனது புதிய கிரிக்கெட் வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்ள விரும்பிய திசை இது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு கடவுள் கொடுத்த திறமைகளை நான் ஒரு நாள் பகிர்ந்து கொள்வேன் என்று நினைத்திருந்தேன். அது இப்பொழுது ஐபிஎல் தொடரில் சிறந்த அணியில் ஒன்றுக்கு பயிற்சியாளராக இருப்பதின் மூலம் நனவாகி இருக்கிறது.

இந்த சீசன் முழுவதும் எங்களை ஆதரித்த எங்களின் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் உண்மையான சாம்பியன்கள். இந்த மாபெரும் வெற்றி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மறக்க முடியாத சீசன்களில் ஒன்று என்று நினைக்கிறேன்.

என்னை அரவணைத்துக் கொண்ட பயிற்சியாளர் குழுவுக்கு வெறும் நன்றி சொல்வது மட்டும் போதாது. பயிற்சியாளர் குழுவின் இளைய உறுப்பினர்களின் ஒருவரான எனக்கு இது ஒரு பெரிய கற்றலுக்கான வாய்ப்பு. இது எனக்கான செயல்முறை ஆனால் நான் இதை ஒவ்வொரு நொடியும் ரசிக்கிறேன்.

அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் பற்றி குறிப்பிட்டு கூற வேண்டும். அவருடன் சேர்ந்து கற்றுக் கொள்வதை நான் ஒரு கூட்டாண்மையாக உணர்ந்தேன். அணியின் இளம் பந்து வீச்சு குழுவுக்கு, இது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்!” என்று கூறியிருக்கிறார்!