“தல தோனிக்கு தெரியும் எதை எப்போது செய்ய வேண்டும் என்று” – ஆட்ட நாயகன் மொயின் அலி பேட்டி !

0
66

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஆறாவது போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்  பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி  துவக்க வீரர்கள் கான்வே மற்றும்      ருத்ராஜின் அபாரமான  ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217 ரன்களை எடுத்தது. தொடக்க  வீரர்களான ருத்ராஜ் 57 ரன்களும் கான்வே 47 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பின் வரிசையில் வந்த வீரர்களும் அதிரடியாக ஆடியதால்  சென்னை அணி 217 ரன்களை குவித்தது.

- Advertisement -

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய  லக்னோ அணியும் ஆரம்பத்தில் அதிரடியாகவே தொடங்கியது. பவர் பிளே ஓவர்களில் அந்த அணி 80 ரன்களை எடுத்து இருந்தது. சென்ற போட்டியில் அபாரமாக விளையாடிய  மேயர்ஸ் இந்தப் போட்டியிலும் அரை சதம் எடுத்தார். 53 ரன்கள்  அவர் ஆட்டம் இழக்க லக்னோ அணியின் இன்னிங்ஸ் தடம் புரண்டது.

சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான  மொயின் அலி மற்றும் மிச்சல்  சான்ட்னர் சிறப்பாக பந்துவீசி  லக்னோ அணியை கட்டுப்படுத்தினர். இவர்கள் இருவரது பந்து வீச்சு இன்று  சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவர்கள் இருவரும் கூட்டாக  எட்டு ஓவர்கள் பந்துவீசி  47 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து  ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதிலும் குறிப்பாக மொயின் அலி சிறப்பாக பந்துவீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருதை வென்ற பின்  பேட்டியளித்த அவர் “அவர்கள் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களிருப்பதால்  டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவது போன்ற லைன் அண்ட் லென்த் பயன்படுத்தி பந்து வீசினேன். மேலும் பந்தினை சுழற்சி செய்ய முயற்சித்தேன்  அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சான்ட்ணருடன் இணைந்து பந்து வீசியது ஒரு நல்ல அனுபவம். எங்களது பந்துவீச்சு ஜோடி அணிக்கு  சாதகமாக அமைந்திருக்கிறது”  என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கேப்டன் தோனிக்கு தெரியும் எப்போது எதை செய்ய வேண்டும் என்று. மேலும் எந்த பந்துவீச்சாளர்கள் எந்த சூழ்நிலைக்கு சரியாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து அவர் பந்து வீசச் செய்வார். வலது கை பேட்ஸ்மன்களுக்கு லெக் சைடு பௌண்டரி தூரமாக இருக்கும்போது ஆஃப்  ஸ்பின்னர்கள் பந்து வீசுவதில்  எந்த சிரமமுமிருப்பதாக நான் உணரவில்லை. இந்தத் தொடரில் நான் எல்லா போட்டிகளிலும் பந்து வீச மாட்டேன் என்று நினைக்கிறேன். ரவீந்திர ஜடேஜாவும் தற்போது அணியில் இருப்பதால் சில அணிகளுக்கு ஏற்றவாறு எம்எஸ் எங்களை பயன்படுத்துவார் என தெரிவித்தார்.