டி20 உலககோப்பை 2024: இந்திய அணியில் மாற்றம் செய்ய முடியுமா.. விதி என்ன சொல்கிறது?

0
4571
ICT

சில நாட்களுக்கு முன்பு அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு, நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. மேலும் மூன்று வீரர்களை ரிசர்வ் வீரர்களாக அறிவித்தது. இந்த அணியில் மாற்றம் செய்து, ரிங்கு சிங், நடராஜன் மற்றும் ருதுராஜ் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறதா? ஐசிசி விதி என்ன சொல்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்.

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் நடராஜன் மற்றும் ருதுராஜ் பெயர் ரிசர்வ் பட்டியலிலும் இல்லை. எனவே இவர்களுக்கு 15 பேர் கொண்ட அணியிலோ அல்லது ரிசர்வ் பட்டியலிலோ இடம் தர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இதில் ரிங்கு சிங்கை பொருத்தவரையில் அவரை நேரடியாக 15 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் பெரிய கோரிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருக்கு கிடைத்த 15 போட்டி வாய்ப்பையும் மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி 89 ஆவரேஜ் மற்றும் 176 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு வீரரை எந்த அணியுமே வெளியே விடாது.

அதே சமயத்தில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான பட்டியலில் எட்டு போட்டியில் 15 விக்கெட் எடுத்து தமிழகத்தின் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் கடைசிக்கட்ட ஓவர்களை வீசுவது மிகப்பெரிய விஷயம். இந்த ஓவர்களில் தன்னுடைய யார்க்கர் மற்றும் மெதுவான பவுன்சர்கள் மூலமாக மிகத் திறமையாக செயல்பட்டு வருகிறார்.

அடுத்து ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மாற்று துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் செயல்பாடு மிகவும் சுமாராக இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என எல்லா பக்கத்திலும் ருதராஜ் பேட்டிங் செயல்பாடு அபாரமாக இருக்கிறது. எனவே இவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கில் இடத்திலும், நடராஜனை கலீல் அகமது இடத்திலும் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலிய கேள்வி கேளுங்க.. வேகமா விளையாட சொல்லுங்க.. ஆனா இதை செய்யாதிங்க – ஹர்பஜன் சிங் வேண்டுகோள்

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் மே 25ஆம் தேதி வரையில் தாராளமாக செய்யலாம். அதற்கு மேல் செய்ய வேண்டும் என்றால்தான் வீரர்கள் காயம் அடைந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட வேண்டும். ஆனால் மே மாதம் 25ஆம் தேதிக்குள் நிச்சயம் இந்த வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் மாற்றங்களை தாராளமாகச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.