ஐபிஎல் தொடரின் 39வது கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி தோற்று இருந்தாலும், சிஎஸ்கே வீரர் ஆல்ரவுண்டர் சிவம் தூபேயின் அசத்தலான பேட்டிங் பங்களிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெறும் 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்த இவரது சரவெடி ஆட்டம் முக்கியமாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் கவனத்தை பெரிதாக ஈர்த்துள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் பணிவான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருபது ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. முன்னணி வீரர்கள் சிலர் ஆட்டம் இழந்து விரைவாக வெளியேறினாலும், அணியின் கேப்டன் ருத்ராஜ் நம்பிக்கை நட்சத்திரமாக நின்று விளையாடினார். 60 பந்துகளை எதிர்கொண்ட இவர் 12 பௌண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 108 ரன்கள் விளாசினார்.
இவருக்கு பக்கபலமாக மறுமுனையில் சர வெடியாய் வெடித்துக் கொண்டிருந்த சிவம் தூபே ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் யாஷ் தாக்கூர் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை விளாசி, சென்னை அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தினார். 27 பந்துகளை எதிர்கொண்ட இவர் மூன்று பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 66 ரன்களை குவித்து தனது சிறப்பான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சிவம் தூபேவை வருகிற டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யும் படி அஜித் அகர்கரிடம் பணிவான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டது “உலகக் கோப்பை சிவம்தூபேவுக்காக ஏறிக் கொண்டிருக்கிறது. அஜித் அகர்கர் பாய் இவரை தயவு செய்து தேர்வு செய்யுங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இடைவேளையின் போது பதிவிட்டது. தற்போது சுரேஷ் ரெய்னாவின் பதிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். ஏற்கனவே இந்திய முன்னாள் வீரர்கள் பல சிவம் தூபே நிச்சயமாக உலக கோப்பைக்கு வேண்டும் என்று கூறிவரும் நிலையில், அவரது பேட்டிங் பங்களிப்பும் அதை நிரூபிப்பது போல் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: கேப்டன்சியில் ருதுராஜின் 3 சொதப்பல் முடிவுகள்.. பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே-க்கு ஏற்பட்ட சிக்கல்
எனவே வருகிற டி20 உலக கோப்பைக்கு கட்டாயமாக தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 213 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் ஸ்டானிஷ் சிறப்பாக விளையாடி 124 ரன்கள் குவித்தார்.
World Cup loading for Shivam dube ! @imAagarkar bhai select karo please 🇮🇳🙏 https://t.co/b7g0BxHRSp
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 23, 2024