குவாலிபயரில் சூப்பர் கிங்ஸ் தோல்வி ; எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் மோதல் ; விறுவிறுப்பாகும் எம்எல்சி டி20 தொடர்!

0
1320
MLC2023

தற்பொழுது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் நான்கு அணிகளை ஐபிஎல் அணிகளை வாங்கி உள்ள அணி நிர்வாகங்கள் வாங்கி இருக்கின்றன.

இன்று இந்த தொடரில் பிளே ஆப் சுற்றின் முக்கியமான இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி, வாஷிங்டன் ஃபிரீடம் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கான குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது போட்டியாக இறுதிப் போட்டிக்கான குவாலிபயர் சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி தற்போது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் முடிவெடுத்ததற்கு தகுந்தபடி சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்படவில்லை. அந்த அணிக்கு ஏழாவது பேட்ஸ்மேனாக வந்த டேனியல் சாம்ஸ் எடுத்த 26 ரன்கள் தான் அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் ஆகும். கான்வே மற்றும் கோடி ஷெட்டி தலா 24 ரன்கள் எடுத்தார்கள். ஆண்ட்ரூ டை நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து விளையாடிய சீட்டில் ஆர்கஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் நங்கூரமிட்டு நின்றதோடு அதிரடியாக விளையாடி டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கனவை ஒட்டுமொத்தமாக சிதைத்து விட்டார்.

- Advertisement -

இறுதியாக சீட்டில் ஆர்கஸ் அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி மிக எளிதாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. சேக்கான் ஜெயசூர்யா 34 பந்தில் 31 ரன் எடுக்க, குயின்டன் டி காக் 50 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 88 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இதைத்தொடர்ந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் ஐபிஎல் தொடரில் தனது பங்காளியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் இருக்கின்ற காரணத்தினால், இந்த ஒட்டுமொத்த தொடருக்கும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் கிடைத்து வருவதோடு, தொடரும் மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. அடுத்து இவர்கள் மோதிக்கொள்ள இருக்கும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவே அமையும்!