சூப்பர் 4.. பங்களாதேஷ் வெளியேறியது.. இலங்கை தெ.ஆ சாதனையை உடைத்து புதிய வரலாறு.. பரபரப்பாகும் ஆசிய கோப்பை!

0
19721
Asia cup

இன்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றில் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் மோதிக்கொண்டன!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்க 40(60) கருணரத்தினே 18(17) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

அடுத்து வந்த குஷால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்து
50(73) ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் சரித் அசலங்கா 10(23), தனஞ்செய டி சில்வா 6(16), டசன் சனகா 24(32) துனித் வெல்லாலகே 3(3), தீச்சனா 2(3), ரஜிதா 1*(1) ரன்கள் எடுத்தார்கள்.

இன்னொரு முனையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விக்கெட் கீப்பர் சதீரா சமரவிக்ரமா அதிரடியாக 72 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 93 ரன்கள் எடுத்து இறுதிப் பந்தில் ஆட்டம் இழந்தார். இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன் சேர்த்தது. டஸ்கின் அஹமத் மற்றும் ஹசன் முகமத் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரியான பங்களிப்பு தரவே இல்லை. அனுபவ வீரர்களான லிட்டன் தாஸ் 15(24), கேப்டன் ஷகிப் அல் ஹசன் 3(7), முஸ்பிகியூர் ரஹீம் 29(48) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

ஒரு முனையில் இளம் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் மட்டும் 97 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 82 ரன்கள் எடுத்து போராடி பார்த்தார். இவரின் போராட்டம் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை.

இறுதியில் பங்களாதேஷ் அணி 48.1 ஓவரில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. மேலும் இரண்டாவது சுற்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோற்று இருந்தது. இதனால் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இலங்கை அணி இரண்டாவது சுற்று முதல் போட்டியில் வென்று, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. இலங்கை தரப்பில் கேப்டன் சனகா, பதிரனா மற்றும் தீக்சனா மூவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

மேலும் இந்த வெற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு தொடர்ச்சியான 13-வது வெற்றியாகும். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தொடர்ந்து 12 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் வென்று இருந்த சாதனையை இலங்கை முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 வெற்றிகள் பெற்று ஆஸ்திரேலியா இருக்கிறது!