IND vs SA.. மழையால் போட்டி ரத்து.. நீங்க அத பண்ணி இருந்தா மேட்ச் நடந்து இருக்கும்.. சுனில் கவாஸ்கர் அதிருப்தி.!

0
541

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் மோத இருந்த முதலாவது டி20 போட்டி நேற்று டர்பனில் தொடங்க இருந்தது.

இந்நிலையில் அங்கே தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டி நடத்த வாய்ப்பின்றி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் லெஜெண்டரி வீரர் சுனில் கவாஸ்கர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மைதானத்தை முழுவதுமாக மூடாதது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக ஸ்டார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் மைதானத்தின் அவுட் ஃபீல்டு முழுவதையும் மூடும் அளவிற்கு வசதிகளை செய்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்கள் பிட்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை மட்டுமே கவர் செய்கின்றன. இதனால் அவுட் ஃபீல்டு மழையால் பாதிக்கப்படுகிறது. இதனால்தான் மழை நின்ற பின்பும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விரிவாக பேசுகையில் ” ஆடுகளத்தின் பெரும்பாலான பகுதிகள் மூடப்படாமல் இருந்து மழை நின்றாலும் போட்டியை தொடங்குவதில் சில மணி நேரங்கள் காலதாமதம் ஆகிறது. மீண்டும் மழை பெய்தால் போட்டியை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்று சர்வதேச கிரிக்கெட் வாரியங்கள் அனைத்தும் நல்ல பொருளாதார நிலையைப் பெற்று இருக்கின்றன. எல்லா நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களிடமும் நிறைய பணம் இருக்கிறது. பிசிசிஐ அளவிற்கே மிகப்பெரிய பணக்கார வாரியங்களாக இல்லையென்றாலும் மைதானம் முழுவதையும் மூடுவதற்கு தேவையான கவர்களை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கிறது.

2019 ஆம் வருட உலக கோப்பையிலும் மழையினால் பல போட்டிகளின் முடிவுகள் மாறியதை நாம் பார்த்தோம். மைதானம் முழுவதையும் மூடாததால் பல போட்டிகள் குறித்த நேரத்தில் தொடங்கவில்லை. மேலும் சில முக்கியமான போட்டிகள் கைவிடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில போட்டிகளில் மழை நின்ற பின்பும் ஆடுகளம் முற்றிலுமாக கவர் செய்யப்படாததால் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு கூட ஒரு முக்கியமான போட்டி இந்த காரணத்தால் கைவிடப்பட்டது.

- Advertisement -

இவற்றிற்கெல்லாம் முக்கியமான காரணம் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்தது தான். இது போன்ற தவறுகள் நடக்காமல் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் மைதானம் முழுவதையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக விடப்பட்டது. அதற்கு அடுத்த போட்டியில் ஆடுகளம் முழுவதையும் மூடும் வகையில் கங்குலி வசதிகளை உருவாக்கி இருந்தார். எனவே சர்வதேச போட்டிகளை நடத்துபவர்களிடம் இதுபோன்ற ஈடுபாடு இருக்க வேண்டும்” என கூறி முடித்திருக்கிறார் கவாஸ்கர்.

இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் வைத்து பன்னிரெண்டாம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி வருகின்ற 14ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்பமாகும்.