இந்திய அணி அதிரடியான முறையில் பேட்டிங் செய்வதற்கு காரணம் பயிற்சியாளர் கம்பீர் கிடையாது எனவும் அதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மாதான் எனவும் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 51 ஓவர்களில் அதிரடியாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன்கள் குவித்து இரண்டு நாட்களில் போட்டியை வென்று அசத்தியது. இந்திய டெஸ்ட் வெற்றிகளில் இந்த வெற்றி முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி இடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வழக்கமான பேட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. ஆனால் ஆக்ரோஷமாக விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இனி இந்திய அணி ஆக்ரோஷமான முறையில் பேட்டிங் செய்யும் அதை தானே முன்னின்று ஆரம்பித்து வைப்பேன் என ரோஹித் சர்மா முடிவு செய்து தற்போது வரை அதை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்டிங் வெற்றிக்கு காரணமாக பயிற்சியாளர் கம்பீரை சொல்வதை சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது இந்திய அணியின் அதிரடி பேட்டிங் முறைக்கு அவரை காரணம் காட்டுவது மிகவும் மோசமானது. கம்பீர் விளையாடும் பொழுது மெக்கலம் போல அதிரடியான முறையில் விளையாடியவர் இல்லை. இதில் யாருக்காவது பெருமை சேர வேண்டும் என்றால் அது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மட்டும்தான்”
இதையும் படிங்க: 328/4… ஷான் மசூத் ஷபிக் மாஸான சதங்கள்.. கம்பேக் கொடுத்த பாகிஸ்தான்.. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி
“இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலம் ஆகியோர் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டிங் முறைக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இப்படியான அணுகுமுறையைதான் கேப்டனாக அணிக்கு வெளிப்படுத்தி வருகிறார். இதை நாம் பார்த்தும் வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.