மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் மலிங்கா துஷாரா ஹாட்ரிக்.. பங்களாதேஷை இலங்கை அணி சுருட்டியது

0
88
Thushara

தற்போது இலங்கை அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வனிந்து ஹசரங்கா தலைமையில் இலங்கை விளையாடுகிறது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இன்று தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இலங்கை அணிக்கு பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரராக வந்த தனஞ்செய டி சில்வா 8, கமிந்து மெண்டிஸ் 12, வனிந்து ஹசரங்கா 15, சரித் அசலங்கா 3, ஏஞ்சலோ மேத்யூஸ் 10, டசன் சனகா 19, சதிரா சமரவிக்ரமா 7* என சொற்ப ரன் பங்களிப்பு மட்டுமே தந்தார்கள்.

ஆனால் இன்னுமொரு துவக்க ஆட்டக்காரரான அனுபவ வீரர் குஷால் மெண்டிஸ், ஒரு முனையில் நிலைத்து நின்றதோடு அதிரடியாகவும் விளையாடி 55 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. பங்களாதேஷ் தரப்பில் டஸ்டின் அகமத் மற்றும் ரிசாத் உசைன் இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு, நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளிடம் மோதி மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய ஜூனியர் மலிங்கா எனப்படும் நோவன் துசாரா பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். இவர் மலிங்கா போன்ற ஸ்லிங் பவுலிங் ஆக்சன் மூலம் அதிரடியான யார்க்கர்கள் வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் வீசிய ஆட்டத்தில் நான்காவது மற்றும் இவரது இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் கேப்டன் நஜீபுல் சாந்தோ 1, மூன்றாவது பந்தில் தவ்ஹீத் ஹ்ரிடாய் 0, நான்காவது மகமதுல்லா 0 என தொடர்ச்சியாக வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். மீண்டும் பந்து வீச்சுக்கு வந்த இவர் சௌமியா சர்க்கார் 11, சோரிபுல் இஸ்லாம் 4 ரன்னில் அனுப்பி வைத்தார்.

கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிசாத் உசைன் 30 பந்தில் அதிரடியாக ஏழு சிக்ஸர்கள் உடன் 53, டஸ்கின் அஹமத் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் பங்களாதேச அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி இருக்கிறது.

இதையும் படிங்க : “வெற்றிக்கு காரணம் இவங்க ரெண்டுபேர்தான் .. நான் அவங்ககிட்ட இருந்து கத்துக்கறேன்” – ராகுல் டிராவிட் பேச்சு

இலங்கை தரப்பில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட நுவன் துஷாரா 4 ஓவர்கள் பந்துவீசி, 1 மெய்டன் செய்து, 20 ரன்கள் விட்டுத் தந்து, 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மும்பை இந்தியன் அணிக்கு ஐபிஎல் தொடர் நெருங்குகையில் இது நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.