இலங்கை அணி சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முன்னேறி இருக்கிறது.
தற்போது பங்களாதேஷ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷனை சிறப்பாக விளையாடிய டிரா செய்திருந்தது.
திரும்பி வந்த இலங்கை
இந்த போட்டியிலும் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் இலங்கை அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக திரும்பி வந்தது. பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சத்மன் இஸ்லாம் 48 ரன்கள் எடுத்தார். அஸீதா பெர்னாடோ 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா 158, தினேஷ் சண்டிமால் 93, குசால் மெண்டிஸ் 84 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் குவித்து 211 ரன்கள் முன்னிலை பெற்றது. பங்களாதேஷ் அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
புள்ளி பட்டியலில் இலங்கை உயர்வு
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி 133 ரன்கள் எடுத்து சுருண்டது. இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : வெறும் 33 ஓவர்.. ஹேசில்வுட் மேஜிக் கைவரிசை.. திடீரென சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. ஆஸி மீண்டு வந்து அசத்தல் வெற்றி
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 12 புள்ளிகள் உடன், 100 வெற்றி சதவீதத்துடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இலங்கை அணி ஒரு வெற்றி ஒரு ட்ராவுடன் 16 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இரண்டு போட்டியில் ஒரு தோல்வி ஒரு டிராவுடன் பங்களாதேஷ் அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றன. நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் இன்னும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






