ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தான் ஒரு பேட்டராக இருக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
ஆர்சிபி யின் சொந்த மைதானமான சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸை இழந்த சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. ஆடுகளம் பேட்டிங்க்கு மிகவும் சாதகமாக காணப்பட்ட நிலையில், பெரிய இலக்கை பெங்களூர் அணிக்கு நிர்ணயிக்க சன்ரைசர்ஸ் அணியினர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்த நிலையில், அபிஷேக் ஷர்மா 34 ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து மூன்றாவதாக களம் இறங்கிய கிளாஸன் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 102 ரன்கள் குவித்தார்.
இறுதிக்கட்டத்தில் மார்க்ரம் மற்றும் சமாத் கூட்டணி அதிரடியாக விளையாட, 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. பின்னர் இந்த அபார இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்த நிலையில் விராட் கோலி 42 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டூ ப்ளசிஸ் 62 ரன்களில் வெளியேற, பின்னர் இறுதியாக அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.
இருப்பினும் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே வெற்றிக்கு பின்னர் பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருக்க விரும்புகிறேன். இப்போட்டி கிரிக்கெட்டில் ஒரு அற்புதமான விளையாட்டாக இருந்தது. அற்புதமான காட்சிகளையும் கொடுத்தது.
நல்ல வேடிக்கை நிறைந்த விளையாட்டாக இருந்தது. நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். டி20 கிரிக்கெட்டில் ஏழு அல்லது எட்டு ஓவர்களை நீங்கள் வீசினால் விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நான் இந்த ஆடுகளத்தை ஆராய்ச்சி செய்வதை நிறுத்தி விட்டேன். சின்னசாமி மைதானம் மிகவும் வறண்டு பேட்டிங்க்கு சாதகமாக காணப்பட்டது.
இதையும் படிங்க:RCB vs SRH: 40 ஓவர்கள் 549 ரன்கள்.. போராடிய தினேஷ் கார்த்திக்.. கடைசியில் ஹைதராபாத்தை காப்பாற்றிய நடராஜன்
இந்தப் போட்டியின் மூலம் நான்கு வெற்றிகள் பெற்றிருப்பது உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எங்கள் பேட்ஸ்மேன்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது” என்று கூறி இருக்கிறார். இந்தப் போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.