இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதும், அவரது விருப்பப்படி துணைப் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் பந்துவீச்சு பயிற்சியாளர் மட்டும் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் யார் என்கின்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் பராஸ் மஹாம்ப்ரே பந்துவீச்சு பயிற்சியாளராகவும், விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் விக்ரம் ரத்தோர் இடத்திற்கு கம்பீர் அபிஷேக் நாயரை கொண்டு வந்தார். மேலும் ராகுல் டிராவிட் காலத்தில் பில்டிங் பயிற்சியாளராக இருந்த டி.திலீப்பை தக்க வைத்துக் கொண்டார்.
மேலும் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தமிழகத்தின் லட்சுமிபதி பாலாஜி பெயர் அடிபட்டது. மேலும் ஜாகிர் கான் பெயரும் கூட பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் கம்பீர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் மோர்னே மோர்கலை இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருக்கிறார். மேலும் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக துவங்கும் டெஸ்ட் தொடரில் மோர்னே மோர்கலுக்கு முதல் தொடராக இருக்கும் எனவும் அறிவித்திருக்கிறார்.
மோர்னே மோர்கல் 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் மூலமாக அறிமுகமானார். 86 டெஸ்ட் போட்டிகளில் 309 விக்கெட்டுகள், 117 ஒரு நாள் போட்டிகளில் 188 விக்கெட்டுகள், மேலும் 153 உள்நாட்டு போட்டிகளில் 566 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இவர் 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் அதே ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி உடன் இணைந்து பணியாற்றி இருந்தார். பிறகு பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிறைய பிரச்சனைகள் உருவானது. அந்த நேரத்தில் தாமாகவே பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டி20.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. பும்ராவுக்கு சவால் விட்ட 18 வயது வீரர் அறிமுகம்
மேலும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தங்களுடைய பயிற்சியாளர் குழுவில் இந்தியர்களைக் கொண்டு வந்தார்கள். ஆனால் கம்பீர் தன்னுடைய பயிற்சியாளர் குழுவில் மீண்டும் வெளிநாட்டு வீரர்களை கொண்டு வந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கம்பீர் மென்டராக இருந்த பொழுது, அங்கு மோர்னே மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பழக்கம் தற்போது அவரை இந்திய அணிக்கும் கம்பீர் அழைத்து வர காரணமாகி இருக்கிறது!






