ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினி விளையாட வைக்க வேண்டும் என அதற்கான காரணங்களை விளக்கி இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறி இருக்கிறார்.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஒதுக்கப்பட்டு வருகிறார். மேலும் ரவீந்திர ஜடேஜா ஸ்பின் ஆல் ரவுண்டராக தொடர்ந்து வெளிநாட்டு டெஸ்டில் இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். கூடுதல் சுழல் பந்துவீச்சாளர் தேவைப்பட்டாலும் அந்த இடத்திற்கு குல்தீப் யாதவை சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது.
2023 பைனலில் ஏற்பட்ட தவறு
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என கங்குலி ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். ஆனாலும் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜாவையே சேர்த்தார்கள். இடதுகை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இந்திய அணி இடம் இருந்து போட்டியை எடுத்துச் சென்று விட்டார்.
மேலும் ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என முக்கிய பேட்ஸ்மேன்கள் இடது கை வீரராக இருந்தார்கள். இடது கை வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இதே போலான ஒரு தவறை செய்து விட வேண்டாம் எனக் கங்குலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் வேண்டாம்
இது குறித்து கங்குலி திட்டவட்டமாக கூறும் பொழுது “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுழல் பந்துவீச்சாளராக யார் இடம் பெற வேண்டும் என்பதற்கு எந்த விதமான விவாதமும் கிடையாது. உங்களுடைய சிறந்த சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தான் அந்த இடத்தில் விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : பவர் பிளேவில் 58/1.. அடுத்து 59/9.. பரிதாபமாக ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்.. ஆஸி அபார வெற்றி
“மேலும் ஆஸ்திரேலியா பேட்டிங் யூனிட்டில் இடது கை வீரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது உறுதியானது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள் என்பது உண்மை. இருந்த போதிலும் முதல் டெஸ்டில் உங்களுடைய சிறந்த சுழல் பந்துவீச்சாளரை கொண்டு நீங்கள் களம் இறங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






