பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.
தற்போது வெள்ளைப்பந்து தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்தது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனப் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. அடுத்து முதல் இரண்டு டி20 போட்டிகளை தோற்று தொடரை இழந்தது. இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது.
பரிதாபமாக சரிந்த பாகிஸ்தான் அணி
இன்று மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் முகமது ரிஸ்வான் விளையாடவில்லை. தொடக்க ஆட்டக்காரராக வந்த ஃபர்கான் 7பந்தில் ஒன்பது ரன்கள் எடுத்து. இருந்தபோதிலும் அடுத்து அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி மேற்கொண்டு 59 ரன்கள் மட்டும் எடுத்து மீதி 9 விக்கெட்டுகளையும் இழந்து 18.1 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பாபர் அசாம் 28 பந்தில் 41 ரன்கள், ஹசிபுல்லா கான் 19 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். ஆரோன் ஹார்டி 3, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜாம்பா இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஸ்டோய்னிஸ் அதிரடியில் பாகிஸ்தான் ஒயிட் வாஷ்
இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 4 பந்தில் 2 ரன்கள், ஜாக் பிரேசர் மெக்கர்க் 11 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். தொடர்ந்து வந்த கேப்டன் ஜோஸ் இங்லீஷ் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : இந்திய அணியில் இவருக்கு பெரிய இதயம்.. இவர் ஆடறத பாக்கவே நான் காத்திருக்கேன் – கோச் மோர்னே மோர்கல் பேட்டி
இந்த நிலையில் ஒரு முனையில் நின்று வெளுத்து வாங்கிய ஆல் ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 27 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவரில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை டி20 தொடரில் ஒயிட் வாஸ் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்றதற்கு ரிவெஞ்ச் எடுத்திருக்கிறது.






