ஸ்மிரிதி மந்தனா அபார அரை சதம் ! காமன்வெல்த் தொடரில் பாகிஸ்தானை சுருட்டிய இந்திய மகளிர் அணி

0
148
Smriti Mandhana

இங்கிலாந்தில் நடந்து வரும் காமென்வெல்த் விளையாட்டு போட்டிகளில், கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டு, காமன்வெல்த் நாடுகளின் பெண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்க, இருபது ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது!

காமன்வெல்த் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியாக க்ரூப் ஏ வில் இடம்பெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மாலை பர்மிங்ஹாமில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் டாஸில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டி 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது!

- Advertisement -

இதன்படி பாகிஸ்தான் அணிக்குத் துவக்கம் தர களமிறங்கிய முனீபா அலி மட்டுமே முப்பது பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். மற்ற பாகிஸ்தானிய வீராங்கனைகள் யாரும் பேட்டிங்கில் பெரிதாய் சோபிக்கவில்லை. அலியா ரியாஸ் மட்டுமே 18 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 18 ஓவர்களின் முடிவில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் தரப்பில் ரேணுகா சிங், மேக்னா சிங், செபாலி வர்மா தலா ஒரு விக்கெட்டையும், ஸ்னே ரணா, ராதா யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இதில் ஸ்னே ரணா நான்கு ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!

இதையடுத்து 18 ஓவர்களில் 100 ரன்கள் என்று களமிறங்கிய இந்திய அணிக்கு, இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் சேவாக்கான செபாலி வர்மா 9 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸரோடு 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரரான இடக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா மூன்று சிக்ஸர்கள் எட்டு பவுண்டரிகளோடு 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், இந்திய அணியை 11.4 ஓவர்களில் 102 ரன்களை எட்ட வைத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைய வைத்தார்!

- Advertisement -

இதுவரை தன்னோடு சேர்த்து நான்கு அணிகள் கொண்ட ஏ பிரிவில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் தற்போது +1.165 என்ற பெரிய ரன்ரேட்டால் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெல்வது மிக முக்கியம்!