ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது கேப்டன் பதவியைக் கைவிடுவது மற்றும் டிரேட் மூலம் வேறு அணிக்கு மாறுவது குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட சூழல் குறித்தும், எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அம்பத்தி ராயுடு முக்கிய அவதானிப்புகளை முன்வைத்துள்ளார்.
மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா எதிர்நோக்கிய சவால்கள் குறித்து ராயுடு கூறியபோது “மும்பையில் ஹர்திக் தான் ஒரு மூலையில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் என்று நான் நினைக்கிறேன். அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது, டிரஸ்ஸிங் ரூமில் வீரர்களின் இயல்பான செயல்பாடு மாறிவிடும். ஹர்திக்கிற்கு பல விஷயங்கள் சரியாக அமையவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்ந்தாலும் இனி கேப்டனாக இருக்கக் கூடாது என்றும், ஒரு சாதாரண வீரராக தனது ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒருவேளை அவர் டிரேட் மூலம் வேறு அணிக்குச் சென்றாலும், குறைந்தது ஒரு பருவத்திற்கு கேப்டன் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.






