இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவி இருக்கின்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தருணத்தில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் கில், நாங்கள் தோல்வியை தழுவினாலும் நாங்கள் போராடிய விதம் பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நாங்கள் இந்த போட்டியில் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம்.”
பார்ட்னர்ஷிப் இல்லாமல் தோல்வி:
“ஐந்தாவது நாள் ஆரம்பத்தில் வெறும் 135 ரன்கள் தான் அடிக்க வேண்டியது இருந்தது. கைவசம் அதிக அளவு விக்கெட்கள் இருந்ததால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை எனக்கு இருந்தது. இரண்டு பார்ட்னர்ஷிப் மட்டும் எங்களுக்கு சாதகமாக அமைந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.”
“ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள். கடைசி பேட்டர் இருக்கும் வரை எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் இலக்கு ஒன்றும் பெரியது கிடையாது. நிச்சயமாக ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தால் கூட போட்டிக்குள் மீண்டும் வந்து இருப்போம்.”
முதல் இன்னிங்சில் முன்னிலை பெறவில்லை:
“எங்கள் அணியில் ஜடேஜா மூத்த வீரர், அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவர் களத்தில் இருக்கும் போது நாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவருக்கு சொல்லி அனுப்பவில்லை. முதல் இன்னிங்ஸில் நாங்கள் அதிக ரன்களை எடுத்து இருந்தால் நிச்சயம் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.”
இதையும் படிங்க: இங்கிலாந்து அணி அபார வெற்றி.. ஜடேஜா போராட்டம் வீண்.. இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன?
“ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இதைப் போன்று நான்காவது நாள் ஆட்ட நேர இறுதியில் நாங்களும் பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம். எங்கள் வீரர்கள் கொஞ்சம் பொறுப்பாக விளையாடியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம். இன்று காலையில் கூட எங்கள் பேட்டர்ஸ்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து விரைவில் உங்களுக்கு தெரிய வரும்” என கில் தெரிவித்துள்ளார்.






