இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் சேர்த்து சமநிலையிலிருந்து. இதனை அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்தது. இதனால் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
ஜடேஜா போராட்டம்:
யாருமே எதிர்பாராத வகையில் ஜெய்ஸ்வால், கில் கருண் நாயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் 58 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் களமிறங்கியது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்தியாவுக்கு இருந்தது.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 39 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகியும் நிதிஷ் குமார் 13 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார்.இதனால் இந்திய அணி 112 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ஆனால் ஜடேஜா மட்டும் தனியாலாக நின்று போராடினார். அவருக்கு பும்ரா 54 பந்துகளை எதிர் கொண்டு கம்பெனி கொடுக்க, அவரும் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஒரு விக்கெட்டுக்கு இந்திய அணி போராடியது.
தோல்விக்கான காரணம்:
அப்போது சிராஜ் 30 பந்துகளை எதிர் கொண்டு நான்கு ரன்கள் எடுத்த நிலையில் சோயிப் பஷீர் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன் காரணமாக இந்திய அணி 17 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. ஜடேஜா மட்டும் கடைசி வரை களத்தில் 61 ரன்னுடன் இருந்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் வெற்றிக்காக போராடிய ஜடேஜா.. வேண்டுமென்றே சீண்டிய இங்கிலாந்து வீரர்.. கடுப்பாகி மோதல்.. களத்தில் பரபரப்பு
இந்த தோல்விக்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், இந்திய அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட கூடுதலாக ரன்கள் அடிக்க வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் ரிஷப் பன்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனது தான் இந்த தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோன்று இந்திய அணியின் பேட்டிங்கில் உள்ள கருண் நாயர் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.






