“சுயநலம் இல்லாத பையன்.. 5 சதம் மிஸ் ஆச்சு..” – ரோகித் சர்மாவுக்கு சோயப் அக்தர் வித்தியாசமான பாராட்டு

0
20476

தற்போது நடைபெற்று வரும் நடப்பு உலக கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 326 ரன்கள் குவித்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு அதிரடியான துவக்கத்தை மீண்டும் ஒருமுறை அமைத்துக் கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவர் 24 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கேப்டன் ரோகித் சர்மா. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த இவரது அதிரடி காரணமாக அமைகிறது . இந்த உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 442 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 2 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு சதம் எடுத்த அவர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சதம் எடுக்கும் வாய்ப்பை அதிரடி ஆட்டத்தால் தவறவிட்டார்.

மேலும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அரை சதம் எடுக்கும் வாய்ப்பையும் தவற விட்டிருக்கிறார் ரோகித் சர்மா. இந்த உலகக்கோப்பையில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 122 ஆக இருக்கிறது. தன்னுடைய சொந்த சாதனைகள் பற்றி கவலைப்படாமல் அணியின் வெற்றியை குறிக்கோளாக கொண்டு தூக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடி வருகிறார் அவர். இது பல்வேறு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் ராவல்பின்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயப் அக்தர் ரோகித் சர்மாவை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் சோயப் அக்தர்” ரோஹித் சர்மா சுயநலமில்லாமல் அணிக்காக அதிரடியாக ஆடி வருகிறார். அவரது இந்த அணுகுமுறையால் இந்த உலகக் கோப்பையில் 5 சதங்களை தவறவிட்டிருக்கிறார். முன்பு போல் நிதானமாக ஆடியிருந்தால் அவரால் எளிதாக ஐந்து சதங்கள் எடுத்திருக்க முடியும். ஆனால் அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க தன்னுடைய சொந்த சாதனைகளை பொருட்படுத்தாமல் அதிரடியான அணுகு முறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய நாவல் பிண்டி எக்ஸ்பிரஸ் ” ரோஹித் சர்மாவிடம் அனைத்து விதமான ஷாட்களும் இருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணியின் சுழற் பந்துவீச்சாளர் தப்ரீஸ் சம்சி ரோகித் சர்மா களத்தில் இருக்கும்போது பந்து வீச வந்திருந்தால் குறைந்தபட்சம் 15 முதல் 20 சிக்ஸர்களை அவரது பந்தில் ரோகித் சர்மா அடித்திருப்பார். ரோஹித் சர்மா இன்னும் அதிக ஓவர்கள் விளையாடியிருந்தால் இந்திய அணியும் 430 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும்” என தெரிவித்திருக்கிறார்.

ரோகித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த அதிரடி அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். அவரது இந்த புதிய அணுகுமுறையால் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளம் கிடைக்கிறது. இது பின் வரிசையில் வரும் வீரர்களுக்கு ஆட்டத்தை கட்டமைக்க எளிதாக அமைகிறது. இந்தப் போட்டியிலும் இந்தியா 300 ரன்கள் குவிக்க அவரது ஆட்டம் சிறந்த அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.