“சமிகிட்ட நீங்க இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கவே முடியாது.. புதுசா இருக்கு!” – ஜாகிர் கான் சொன்ன ஆச்சரியமான விஷயம்!

0
6786
Zaheer

இன்று நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தொடர் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் பெற்ற இந்த வெற்றி இந்திய அணியின் நம்பிக்கையை பெரிய அளவில் அதிகரிப்பதாக அமைகிறது.

இந்திய அணியில் விராட் கோலியின் இடத்திற்கும் கூட மாற்று வீரர் உண்டு. ஆனால் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா இடத்திற்கு மாற்று வீரரே கிடையாது. எனவே அவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது மிகப்பெரிய பின்னடைவு.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு ஒரு முழுமையான பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டார். அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் பலவீனமடைந்த பந்துவீச்சு துறையை மேம்படுத்த, சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது சமி கொண்டுவரப்பட்டார்.

முகமது சமியை பொறுத்தவரையில் அவர் தற்பொழுது உலகக்கோப்பை விளையாடும் எந்த அணியில் இருந்தாலும் எல்லாப் போட்டியும் விளையாடுவார். அந்த அளவிற்கு உலகத் தரமான வேகப்பந்துவீச்சாளர். தற்பொழுது இந்திய அணியின் கலவைக்காக அவர் விளையாட முடியாமல் போகிறது.

இந்த நிலையில் வாய்ப்பு பெற்ற அவர் இன்று ஐந்து விக்கெட் கைப்பற்றி, குறிப்பாக கடைசி பத்து ஓவர்களுக்கு வந்த பொழுது, மிகச் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் அதில் கைப்பற்றி, நியூசிலாந்து அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டு, அவர்களை 273 ரன்களுக்கு தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நெருக்கடி இல்லாமல் விளையாட முகமது சமியே காரணம்.

- Advertisement -

இந்த நிலையில் முகமது சமி பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் கூறும் பொழுது “நாம் அவரிடம் பல வருடமாக பார்த்து வருகின்ற செயல் திறனையே இன்றும் வெளிப்படுத்தினார். விக்கெட் டு விக்கெட் வைத்து ஆடுகளத்தில் பந்தை கடுமையாகத் தாக்கினார். ஆனால் இறுதிக்கட்ட ஓவர்களில் சில வேரியேஷன்களை கொண்டு வந்தார். இது அவருடைய மேம்பட்ட பகுதியாக இருக்கிறது.

கடைசிக்கட்ட ஓவர்களில் முகமது சமி இவ்வளவு தெளிவாக பந்து வீசி நீங்கள் பார்த்திருக்க முடியாது. இன்று அவர் திட்டங்கள் மற்றும் செயல்பாட்டில் மிகவும் தெளிவாக இருந்தார்.

சிறப்பான யார்க்கர்களை வீசுவது, மேலும் விரலை ரோல் செய்து, சீம் மூலம் பந்து வீசுவது என அவர் தன்னை மிகவும் நம்பி ஆதரித்தார். இதில் மட்டுமே அவருடைய கவனம் இருந்தது. அவர் எல்லாவற்றையும் எளிமையாக வைத்துக் கொண்டார். இது அவரிடம் முன்பு பார்க்க முடியாத ஒன்று!” எனக் கூறியிருக்கிறார்!