“எங்களோட தோல்விக்கு காரணமே அந்த ஒரு சம்பவம் தான்” – பாபர் அசாம் பேட்டி!

0
40736

உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் என்று பேட்டியளித்துள்ளார் பாபர் அசாம்.

எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதின.

- Advertisement -

டாஸ் வென்ற பவுலிங்கை எடுத்தது இங்கிலாந்து அணி. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ரிஷ்வான் 15 ரன்களுக்கும் மற்றும் பாபர் அசாம் 32 ரன்களுக்கும் அவுட் ஆகினர். இதனால் துவக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை.

மிடில் ஆர்டரில் ஷான் மசூத்(38) மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப்கான்(20) இருவரும் அணியின் ஸ்கொரை உயர்த்த உதவினர்.

மற்ற வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. ஆதலால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாம் கரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்தியாவுடன் அரை இறுதிப் போட்டியில் அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் இம்முறை முதல் ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்களுக்கு அவுட் ஆனார்.

ஹரிஸ் புரூக் 20 ரன்களுக்கும், மொயின் அலி 19 ரன்களுக்கும் அவுட்டாக இங்கிலாந்து திணறியது. போட்டியின் 16வது ஓவரை வீசிய சாகின் அப்ரிடி முதல் பந்தை வீசிய பிறகு திடீரென காயம் ஏற்பட்டதால், அணியின் மருத்துவர்களை அழைத்து பரிசோதித்துக்கொண்டார். ஆனால் சரியாகவில்லை என்பதால் அவரை வெளியில் அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு பாகிஸ்தான் அணி சற்று பின்னடைவை சந்தித்தது என்று கூறலாம். ஏனெனில் அடுத்து வந்த பவுலர் மீதம் இருக்கும் ஐந்து பந்துகளை வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இந்த இடத்தில் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இறுதி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ்(52) அரைசதம் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19 ஓவர்கள் முடிவில் இலக்கை கடந்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், தோல்விக்கு காரணம் என்னவென்று கூறினார்.

“சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் தகுதியான அணிதான். இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். முதல் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு, அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. எங்களது இயல்பான ஆட்டத்தையே நாங்கள் வெளிப்படுத்தினோம்.

உலகின் மிகச் சிறந்த பவுலர்களை நாங்கள் அணியில் வைத்திருக்கிறோம். துரதிஷ்டவசமாக சாகின் அப்ரிடி காயம் அடைந்தது எங்களுக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது. ஆனால் வீரர்களுக்கு காயம் என்பது விளையாட்டில் இயல்பான ஒன்று. விரைவில் குணமடைந்து வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.” என பேசினார்.