இந்த வருடம் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பினிஷிங் பேட்ஸ்மேன் ரிங்கு சிங், யாஸ் தயால் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்து ஆச்சரியப்படுத்தும் விதமாக அணியை வெற்றி பெற வைத்தார்.
அங்கிருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படாத அவர், அயர்லாந்து டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.
இந்த இரண்டு தொடர்களிலும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக கடைசிக்கட்டத்தில் அவருடைய பேட்டிங் அணி முதலில் பேட்டிங் செய்தாலும் இரண்டாவது பேட்டிங் செய்தாலும் பினிஷிங் செய்வதில் மிக சிறப்பாக இருந்தது.
இதன் காரணமாக அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தற்போது ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் தொடர்ந்தது. மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க, மூன்றிலும் அட்டகாசமாக பேட்டிங் செய்திருக்கிறார். மேலும் தனக்கு எத்தனை பந்துகள் கிடைத்தாலும் அதில் தன்னால் தாக்கத்தை உண்டாக்க முடியும் என்று காட்டி இருக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் இவர் தேர்வாகி இருக்கிறார்.
இதுகுறித்து பேசி உள்ள நெக்ரா கூறும்பொழுது “டி20 கிரிக்கெட் மூலமாகத்தான் உங்களுக்கு ரிங்கு சிங்கை அதிகம் தெரியும் என்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் ரஞ்சி டிராபியில் ரன் சராசரியாக 50க்கும் மேல் வைத்திருக்கிறார். அவர் தற்போது 50 ஓவர் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். செலக்டர்ஸ் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை பார்த்து இருக்கிறார்கள்.
நீங்கள் அவரை 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு தேர்ந்தெடுத்தது இந்திய அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆகும். நேற்று அவர் சீக்கிரம் பேட்டிங் செய்ய வந்து, தன்னால் ஓவர்கள் அதிகம் இருக்கும் பொழுதும் சிறப்பாக விளையாட முடியும் என்று காட்டியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 190 ரன்கள் எடுக்கும் என்று இருந்தது. பிறகு 174 ரன்கள் எடுத்தது. காரணம் ரிங்கு கடைசி ஓவரின் போது ஆட்டம் இழந்துவிட்டார். அவர் முன்கூட்டியே ஆட்டம் இழந்து இருந்தால் இந்தியா 160 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும். இந்த இரண்டுக்குமான வித்தியாசமாக அவர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!” என்று கூறியிருக்கிறார்!