ஃபிபா உலகக்கோப்பை வரை பரவிய சஞ்சு சாம்சன் சப்போர்ட்..!

0
397

ரசிகர் ஒருவர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேனர் ஒன்றை கால்பந்து உலககோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் கத்தார் மைதானத்திற்குள் எடுத்துச் சென்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், அந்த அணிக்கு கேப்டன் பொறுப்பிலும் இருந்து வருகிறார். உள்ளூர் போட்டிகளிலும் அபாரமாக செயல்படுகிறார்.

- Advertisement -

அவ்வப்போது இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பிளேயிங் லெவனில் மட்டும் எடுக்கப்படுவதில்லை. ஓரிரு போட்டிகளில் மட்டும் வாய்ப்புகள் கொடுத்துவிட்டு உடனடியாக வெளியில் அமர்த்தப்பட்டு விடுகிறார்.

எந்த ஒரு வீரருக்கும் குறைந்தபட்சம் 10 முதல் 15 போட்டிகள் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே தனது பேட்டிங்கை நிரூபித்து காட்ட முடியும். சாம்சனுக்கு தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வாய்ப்பு கொடுங்கள் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தெரிவித்தார். இப்படியாக ஐந்து ஆறு வருடங்களாக அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிகழ்ந்து வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலும் இவர் இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வைக்கப்பட்டார். நன்றாக விளையாடிய போதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெளியில் அமர்த்தப்பட்டார்.

- Advertisement -

அணிக்கு கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்கிற அடிப்படையில் சாம்சனை வெளியில் அமர்த்திவிட்டு ஆல்ரவுண்டரை எடுக்கிறோம் என்று கேப்டன் தவான் காரணம் கூறினார்.

ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பி வந்த போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சாம்சனுக்கு மட்டும் ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது? என பல்வேறு கேள்விகளையும் எழுப்பிவந்தனர்.

துவக்கத்தில் ரசிகர்கள் மட்டுமே சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இப்போது முன்னாள் வீரர்கள் பலரும் இவருக்கு ஆதரவு கரங்களை நீட்டி உள்ளனர்.

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் சஞ்சு சாம்சனின் ரசிகர் ஒருவர், அவர் புகைப்படம் தாங்கிய பேனர் ஒன்றை மைதானத்தின் உள்ளே எடுத்துச் சென்று சாம்சனுக்கு சப்போர்ட் செய்கிறோம் என காட்டினார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.