இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததன் மூலமாக சில சாதனைகளையும் படைத்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் அபார சதம்
இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இன்று முதலாவது டி20 போட்டி டர்பனில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா எட்டு பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேற மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை மிக எளிதாக கையாண்டு பௌண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசி 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருக்கு கேப்டன் சூரியகுமார் 17 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.
குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன்
அதற்குப் பிறகு தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 47 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என 212 ஸ்ட்ரைக் ரேட்டில் 100 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக டி20 வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் பெற்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு இந்திய வீரராக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:சூர்யா கம்பீராலதான்.. சாம்சனுக்கு இந்த பிரச்சனை தீர்ந்தது.. அதனாலதான் இப்ப அவர் நம்பிக்கையா ஆடுறாரு – உத்தப்பா பேட்டி
மேலும் டி20 தொடரில் விக்கெட் கீப்பர்களில் மூன்று முறை 50 ரன்கள் குவித்து எம் எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் சாதனையை சாம்சன் முந்தி இருக்கிறார். பண்ட், தோனி ஆகியோர் இரண்டு முறை 50 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் கே எல் ராகுல், இஷான் கிஷான் மற்றும் சாம்சன் முதலிடத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் 10 சிக்சர்கள் அடித்ததன் மூலமாக ஒரு போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.