இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் தற்போது முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் குறித்து ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் மிகத் திறமையான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அவரது நிலையற்ற ஆட்டம் காரணமாக இந்திய சர்வதேச அணியில் அவ்வப்போது இடம் அளிக்கப்பட்டு பின்பு மறுக்கப்படும் வந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த டி20 உலக கோப்பைக்கு பின்பு இருந்து கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மூலமாக சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கான நம்பிக்கையை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்திய அணியில் அவருக்கான இடம் குறித்த உறுதியையும் வெளிப்படுத்தியதால் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா சூரியகுமார் யாதவ் மற்றும் கம்பீர் ஆகியோர் முக்கிய பொறுப்புகளை பெறுவதற்கு முன்னதாக சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் ஆர்டரில் நிலைத்தன்மையற்ற நிலை இருந்ததாகவும் இவர்களது வருகைக்குப் பிறகு அது தெளிவாக கண்டறியப்பட்டு இருக்கிறது எனவும் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
கம்பீர் மற்றும் சூர்யகுமார் மூலமாக தெளிவு கிடைத்துள்ளது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சஞ்சு சாம்சன் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார். அவரது சர்வதேச வாழ்க்கையை பார்க்கும் போது கடந்த காலத்தில் இல்லாத வகையில் தற்போது அமைந்திருக்கிறது. முன்பு அவர் எந்த பேட்டிங் ஆர்டரில் பொருந்துவார் என்ற தெளிவின்மையும் இருந்தது. ஆனால் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் வருகைக்குப் பிறகு அது தெளிவாக இருக்கிறது. இந்திய அணியில் அவரது பாத்திரம் குறித்து பல தெளிவுகள் வந்துள்ளன.
இதையும் படிங்க:நான் சச்சின் கிட்ட சொன்னேன்.. இப்ப அதையே விராட் ரோகித்துக்கும் சொல்றேன் – கிரேக் சேப்பல் பேட்டி
அவருக்கான பணி என்ன என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அழுத்தமின்றி நிதானமாக விளையாடலாம். சாம்சன் அபாரமான திறமை கொண்டவர், மேலும் இந்த தொடர் அவருக்கு அணியில் பலமான இடத்தை பெறுவதற்கு உதவும் என்று கூறியிருக்கிறார். தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடி வரும் சாம்சன் 24 பந்துகளில் 38 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.