இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது குறித்து பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த வருண் சக்ரவர்த்தி, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தொடரின் முதல் டி20 போட்டியில் களம் இறங்கி மீண்டும் காயத்தால் வெளியேறினார்.
இதன் காரணமாக அவர் வரவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது, “வருண் சக்ரவர்த்தி கடந்த 3 முதல் 4 மாதங்களாக பிசிசிஐ மையத்தில்தான் இருந்தார், டிஎன்பிஎல் தொடரில் விளையாடக் கேட்டபோது கூட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒரு மாதத்தில் குணமடைய வேண்டிய அவருக்கு, இத்தனை கட்டுப்பாடுகளுக்கு பிறகும் ஒரே ஒரு போட்டியில் விளையாடியவுடன் மீண்டும் காயம் ஏற்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற காய நிர்வாகத்திற்கு உரிய பொறுப்பேற்க வேண்டும், மேலும் மூன்று ஃபார்மட் போட்டிகளுக்கும் தனித்தனி அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “காயங்களுக்கு ஆதரவு ஊழியர்கள் மட்டுமின்றி வீரர்களும் தங்களின் பயிற்சி முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். என்ன பயிற்சிகள் செய்கிறோம் என்பதில் வீரர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 2015-இல் எனக்கு ஒலிம்பிக் லிஃப்டிங் பயிற்சி செய்ததால் தான் காயம் ஏற்பட்டது, அதன்பிறகு நான் அந்தப் பயிற்சியை நிறுத்திவிட்டேன். இதுபோன்ற பயிற்சிகள் வேகம் மற்றும் சக்தியை அதிகரித்தாலும், அது உடலுக்கு செட் ஆகவில்லை என்றால் பிளேயர்களும் அதைத் தவிர்க்க வேண்டும்,” என்று கூறி முடித்துள்ளார்.






