இந்திய கிரிக்கெட் அணியின் சீஃப் செலக்டர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டிப் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அஜித் அகர்கர் பல கடுமையான முடிவுகளை எடுத்தார். அவரது காலத்தில் பல சீனியர் பிளேயர்கள் அணியிலிருந்து விலக நேரிட்டது.
மேலும் அஜித் அகர்கர் தலைமையிலான செலக்சன் கமிட்டி காலத்தில் இந்திய அணி டி20 வேர்ல்ட் கப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கிய சர்வதேசத் தொடர்களை வென்று சாதனை படைத்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “எனக்கு அஜித் அகர்கரை நன்றாகத் தெரியும், எனது ரிட்டயர்மென்ட் சமயத்திலும் அவரிடம் தனியாகப் பேசினேன். சீனியர் பிளேயர்களை அணியிலிருந்து நீக்குவது எளிதான விஷயம் அல்ல. நானும் அப்படி நீக்கப்பட்ட சீனியர் பிளேயர்களில் ஒருவன்தான். இருப்பினும் அவர் ஒரு சிறந்த சீஃப் செலக்டராகச் செயல்பட்டு அணிக்கு பல நன்மைகளைச் செய்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் எப்போதும் சுய பெருமையோடு பார்க்காமல் அவர்களின் நிலையில் இருந்து யோசிக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு அடுத்த தலைமுறை பிளேயர்களை உருவாக்கும் பொறுப்பை மிகச் சரியாகச் செய்தார். அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் மனப்பூர்வமானவை, அடுத்து வருபவருக்கு இந்த டீம் மேனேஜ்மென்ட் பணி சவாலாக இருக்கும்” என்று கூறி முடித்துள்ளார்.






