“சாம்சனுக்கு பல காரணத்தால் வாய்ப்பு கிடைக்கல.. நான் பொதுவா இதைத்தான் சொன்னேன்!” – கேஎல்.ராகுல் பேச்சு!

0
3088
Rahul

இந்திய அணியின் கடந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் முழுவதும் தோல்வியாக அமைந்தது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு இரண்டு என விராட் கோலி தலைமையில் இழந்தது.

இதற்கடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை கேஎல்.ராகுல் தலைமையில் முழுவதுமாக இழந்தது. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து முழுவதுமாக விராட் கோலி அத்தோடு விலகி இருந்தார். எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் சோகமான ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போதைய இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம், இப்பொழுது ஒருநாள் கிரிக்கெட் தொடரை கேஎல்.ராகுல் தலைமையில் இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று, தொடரை உயர்ப்புடன் வைத்திருந்தன. எனவே இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டி இறுதிப் போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சங் தனது முதல் சர்வதேச சதத்தை (108) அடித்தும், திலக் வருமா தனது முதல் ஒரு நாள் கிரிக்கெட் சர்வதேச அரை சதத்தை (55) அடித்தும், நல்ல திருப்புமுனையை தர, இந்திய அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்ஸி மட்டுமே 81 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் சரியான ஒத்துழைப்பு தராததால் தென் ஆப்பிரிக்க அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலிக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் இந்திய கேப்டன் எனும் சிறப்பைக் கேஎல்.ராகுல் பெற்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய கேஎல்.ராகுல் கூறும் பொழுது “எப்பொழுதும் அணி வீரர்களுடன் இருப்பது பிடித்தமான விஷயம். ஏமாற்றமான ஒரு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக அணியினருக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், விளையாட்டை ரசித்து விளையாட வேண்டும், உங்கள் சிறந்ததை கொடுக்க வேண்டும், வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்பதுதான்.

எங்கள் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் கிடையாது, ஐபிஎல் போட்டி தொடர்களில் மட்டும் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறந்த வீரர்கள். எனவே அவர்களை சரி செய்து கொள்ள அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு என்ன ரோல் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் எங்கள் வீரர்கள் 100 சதவீதம் கொடுத்தார்கள். இதற்கு மேல் அவர்களிடம் நான் எதையும் கேட்க முடியாது. சஞ்சு ஐபிஎல் தொடரில் நல்ல திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் சில காரணங்களுக்காக அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் சிறப்பாக செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!