குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் பேட்டிங் நட்சத்திரமான சாய் சுதர்ஷன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய T20 அணியில் இடம் பெறுவது குறித்து பெரிதாக கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதிலாக, டி20 வடிவத்தில் தனது குறைகளை சரிசெய்து, ஒரு பேட்ஸ்மேனாக மேம்படுவதற்கு கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
சுதர்ஷன், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். 229 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்துவதற்கு குஜராத் அணிக்கு நம்பிக்கை அளித்தார். இருப்பினும், அவர் ஆட்டமிழந்த பிறகு, அந்த அணி 208/6 ரன்களுடன் தோல்வியடைந்தனர்.
தற்போது சுதர்ஷன் ஆரஞ்சு தொப்பியை வைத்துள்ளார், 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்கள் குவித்து, 54.21 சராசரியுடனும், 156.18 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் உள்ளார். 23 வயதான இவர், ஒரு IPL தொடரில் 700-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இருப்பினும், இந்த அபாரமான வெற்றியை அதிகம் கொண்டாட விரும்பாமல், T20 கிரிக்கெட்டில் மேலும் சிறந்த பேட்ஸ்மேனாக மாற உதவும் அம்சங்களில் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். இது குறித்து பேசிய அவர்,
“நாட்டிற்காக விளையாடுவது ஒவ்வொருவரின் கனவாகும், நானும் அதை விரும்புகிறேன். ஆனால் இப்போது நான் அந்த வகையில் சிந்திக்கவில்லை.
இந்த சீசனைப் பார்க்கும்போது, டி20 பேட்ஸ்மேனாக மேம்பட வேண்டிய பல பகுதிகள் உள்ளன, எனது விளையாட்டில் பல அம்சங்களில் மேம்பட வேண்டியுள்ளது, அதனால் T20-க்கு திரும்புவதற்கு முன் அதில் கவனம் செலுத்துகிறேன். நிச்சயமாக, வாய்ப்பு வரும்போது, நாட்டிற்காக எனது சிறந்த பங்களிப்பை அளிப்பேன்,” என்று சுதர்ஷன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 212 ஸ்ட்ரைக் ரேட்.. இங்கிலாந்தில் சிஎஸ்கே அடையாளத்தில்.. நொறுக்கி தள்ளிய பிரிவிஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
ஒரு ஐபிஎல் சீசனில் சாய் சுதர்ஷனை விட அதிக ரன்கள் எடுத்தவர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமே – டேவிட் வார்னர் 2016-ல் 848 ரன்கள், ஜோஸ் பட்லர் 2022-ல் 863 ரன்கள், சுப்மன் கில் 2023-ல் 890 ரன்கள், மற்றும் விராட் கோலி 2016-ல் 973 ரன்கள். சுதர்ஷன் இப்போது தனது கவனத்தை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்றவுள்ளார், ஏனெனில் அவர் ஜூன் 20-ல் தொடங்கவுள்ள இங்கிலாந்து செல்லும் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவின் 18 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். 29 முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், 39.93 சராசரியுடன் 1957 ரன்கள் எடுத்துள்ளார்.