2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு பார்படோஸில் நடந்த கொண்டாட்டங்கள் மற்றும் ரோகித் சர்மாவுடன் தனக்கு நிகழ்ந்த முக்கியமான உரையாடல் குறித்து இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நினைவுகூர்ந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு, ரோகித் சர்மா இந்த ஃபார்மட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
அதன்பிறகு இந்திய அணி புயல் காரணமாக சில நாட்கள் பார்படோஸில் மாட்டிக்கொண்ட நிலையில், அங்கு நடைபெற்ற முக்கியமான சந்திப்பு மற்றும் கேப்டன் பதவி வழங்கப்பட்ட விதம் குறித்து சூர்யகுமார் யாதவ் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசும்போது “நான் அண்டர்-19 மற்றும் எனது ஃபர்ஸ்ட் கிளாஸ் அணிகளுக்கும் கேப்டன் பதவி வகித்திருக்கிறேன், எனவே எனக்கு கேப்டன்ஷிப் அனுபவம் இருந்தது. நாங்கள் 2024 உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோகித் பாய் ஓய்வு பெற்றார். நாங்கள் பார்படோஸில் பார்ட்டி செய்துகொண்டு அங்கே மாட்டிக்கொண்டிருந்தோம். பிசிசிஐ செயலாளர், சீஃப் செலக்டர் என முடிவெடுக்கும் அனைத்து அதிகாரிகளும் அங்கே இருந்தனர்”
“அப்போது ரோகித் பாய் என்னிடம் வந்து எனது தலைமைப் பண்பு குறித்துக் கேட்டார். திடீரென்று அவர் ஏன் இதைக் கேட்கிறார் என்று நான் யோசித்தேன், ஏனென்றால் நான் லீடர்ஷிப் திட்டத்திலேயே இருக்கவில்லை. அதன்பிறகு சீஃப் செலக்டரும் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, ரோகித், சீஃப் செலக்டர் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் இணைந்து அணியை முன்னெடுத்துச் செல்ல நான் தான் சரியான நபர் என்று முடிவு செய்தனர்” என்று கூறி இருக்கிறார்.