வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியைச் சேர்ப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து இந்திய முன்னாள் ஓப்பனிங் பேட்டர் அபிநவ் முகுந்த் தனது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிக்ஸர் அடிக்கும் திறனுக்கு ஈடுகொடுக்க வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்க இந்திய நிர்வாகம் நினைக்கும், அதேவேளையில் அவருக்காக பேட்டிங் ஆர்டரை மாற்றுவது ஒரு பெரிய ரிஸ்க் ஆக முடியும் என்று அபிநவ் முகுந்த் எச்சரித்துள்ளார்.
அத்துடன் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தின் நிலைமைகள் இந்திய வீரர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், இந்தத் தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள ஃபேவரிட் அணியாகக் களம் இறங்கும் என்றும் அவர் கூடுதல் தகவலாகத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்து அபிநவ் முகுந்த் பேசும்போது “ஒரு அணி உங்களை விட அதிகமாக சிக்ஸர் அடிக்கிறது என்றால், ஒரே இன்னிங்ஸில் ஒன்பது அல்லது பத்து சிக்ஸர்கள் அடிக்கும் திறமை கொண்ட ஒரு வீரர் பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லாத இளம் வீரர் தான் என்பதை நான் அறிவேன், ஆனாலும் அந்த பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நான் விரும்புவேன், ஏனெனில் அது டிரெஸ்ஸிங் ரூம் சூழலையே மாற்றும். ஆனால் இதில் ஒரு ரிஸ்க் இருக்கிறது, இவர் உள்ளே வந்தால் மற்ற பேட்டர்கள் அனைவரும் தங்களின் வழக்கமான பொசிஷனில் ஆட முடியாது. சஞ்சு சாம்சன் மூணாவது பொசிஷனிலும், இஷான் கிஷான் அதற்குப் பிறகும் ஆட வேண்டியிருக்கும், இதனால் யாரை எங்கே ஃபிட் செய்வது என்று தெரியாது, வைபவ் உள்ளே வரும்போது இந்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மிகக் கடினம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள ஃபேவரிட் அணியாக இருக்கும், ஏனெனில் பெங்களூரு மைதானத்தின் கண்டிஷன்ஸ் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஹைதராபாத் பிட்ச் புதிதாக அமைக்கப்பட்டதால் அங்குள்ள நிலைமைகள் சற்று சவாலாக இருந்தது” என்றும் கூறி இருக்கிறார்.