டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பைக்கு வந்ததும், அவரது தாயார் உடல்நிலை சரியில்லாத போதும் ரோஹித் சர்மாவை வரவேற்று அவருக்கு முத்த மழை பொழிந்தார்.
மேலும் ரோகித் சர்மா டி20 உலக கோப்பையில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சில முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் வெற்றி வாய்ப்பை இந்திய அணி இறுதிப் போட்டியில் நழுவி விட்டது. உலக கோப்பையில் நாம் தோற்று விட்டோம் என்பதை நான் உணரவே எனக்கு மூன்று நாட்கள் ஆனது. அப்படி ஒரு வலி மிகுந்த சூழ்நிலையில் இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். 2022ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்த போதே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓரங்கட்டப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியே சர்வதேச டி20 தொடர்களில் பங்கேற்றது.
ஆனால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா டி20யில் இருந்து விலக, மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டு ரோஹித் திரும்ப கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். அப்படி அவர் கேப்டனாக வந்ததன் விளைவு இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்திருக்கிறது. உலக கோப்பையை வென்றதோடு நேற்று இந்தியா வந்து இறங்கிய இந்திய அணியினருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மாவின் தாயாரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
ரோகித் சர்மா இனி டி20 தொடர்களில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்த நிலையில் இது குறித்து பேசிய அவரது தாயார் “ரோஹித் சர்மா டி20 உலக கோப்பையில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே இதுதான் எனது கடைசி டி20 தொடராக இருக்கும் என்று எங்களிடம் கூறினார். நான் உலக கோப்பையை வெல்ல முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன். இப்படி ஒரு நாளை பார்ப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. இன்று எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், இந்த மகிழ்ச்சியான தருணத்தை காண்பதற்காகவே நான் இங்கு வந்தேன்.
என்னுடைய மகிழ்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளது இது போன்ற சூழ்நிலையை நான் இதற்கு முன்னர் அனுபவித்ததே இல்லை. தற்போது ரோகித் சர்மாவிற்கு கிடைத்திருக்கும் அன்பு அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக வந்ததாகும். இன்று நான் ஒரு மகிழ்ச்சியான தாய்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தோனியின் 2007 டி20 உலகக்கோப்பை வெற்றியை விட.. 2024 வெற்றி இதனால் சிறப்பானது – ரோகித் சர்மா பேட்டி
ரோகித் சர்மா டி20 தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் கேப்டனாக நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்தடுத்து நெருங்க உள்ளதால், ரோகித் சர்மாவின் அடுத்த இலக்காக அந்த இரண்டும் இருக்கும் என்றுஎதிர்பார்க்கலாம்.