இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து மண்ணில் தங்களது முதல் வெற்றி கணக்கை துவங்கியிருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி 258 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் 5 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி பேட்டிங் செய்தபோது அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிக விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் வாஷிங்டன் சுந்தர் 52 ரன்கள், அக்ஷார் பட்டேல் 57 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்கள். மேலும் அணியின் கேப்டன் கில் 80 ரன்கள் குவித்து வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் அவர் வெற்றி குறித்து பேசும் போது ” எங்கள் அணியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எங்கள் பவுலர்கள் மிகவும் இளம் வீரர்கள். ஆனால் எங்களிடம் பலமான அனுபவம் வாய்ந்த பேட்டிங் வரிசை உள்ளது. எனவே இங்கிலாந்து அணி 300 ரன்கள் எடுத்திருந்தாலும் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்பினேன். மேலும் இந்த ஆடுகளம் தென்னாப்பிக்க ஆடுகளத்தை போன்று பவுன்ஸ் தன்மை கொண்டதாக இருந்தது. மேலும் நாங்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் வித்தியாசமான காம்பினேஷன்களை தேர்வு செய்து விளையாடுவோம் அது எங்களுக்கு பெரிய பேட்டிங் வரிசையை கொடுக்கும்” என்று பேசியிருக்கிறார்.