சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக கடந்த 18 ஆண்டுகள் பதவி வகித்த ஸ்டீபன் பிளம்மிங் நேற்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார். 18 ஆண்டுகாலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக அவர் வகித்த நிலையில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான பயிற்சியாளராக திகழ்ந்த ஸ்டீபன் பிளமிங் தலைமையில் சிஎஸ்கே ஐந்து ஐபிஎல் பட்டங்களை வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. அதேபோல இரண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக இருக்கிறது. சூழ்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களிலும் ஜேஎஸ்கே மற்றும் டிஎஸ்கே அணிகளின் செயல்பாடும் ஏமாற்றத்தை தருவதால் பிளம்மிங் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று பிளமிங் வெளியிட்ட பதிவானது ” விளையாட்டு உலகில் 18 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலப் பகுதி. மிகுந்த நன்றி உணர்வோடு நான் விடைபெறுகிறேன். எனது பயிற்சியாளர் பணி வாழ்வில் சிஎஸ்கே அணியுடன் ஆன காலம் எனக்கு கிடைத்த பெரும் பேராகும். நாம் சாதித்த அனைத்தையும் நினைத்து பெருமை கொள்கிறேன். நாம் இணைந்து மறக்க முடியாத வெற்றிகளை கொண்டாடினோம் கடினமான தருணங்களை கடந்து வந்தோம். மேலும் வாழ்நாள் முழுவதும் என்னுடன் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்கினோம். சிஎஸ்கே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானதாக இருக்கும் வரும் காலங்களில் நான் இந்த அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்” என்று பேசி இருக்கிறார்.