உலக கோப்பை தோல்வி.. ஆனா டெஸ்டில் வரலாற்று சாதனைக்கு வாய்ப்பு.. ரோகித்துக்கு மிகப்பெரிய அங்கீகாரம்

0
375

ஐபிஎல் போட்டி தொடரில் எம்.எஸ் தோனிக்கு நிகரான கேப்டனாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் போது இந்திய அணியை வழி நடத்தி தனது தலைமை பண்பை சர்வதேச அளவிலும் நிலை நிறுத்தினார்.

2021ஆம் ஆண்டு, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மூன்று வடிவிலான இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோகித் சர்மா. தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் அனைத்து வடிவங்களான போட்டியிலும் இந்திய அணியை முதல் இடத்திற்கு கொண்டு சென்றார்.

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், அவரது தலைமையின் கீழும் இந்திய அணி, உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. 2022ஆம் ஆண்டு, டி20 உலக கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், தொடர்ந்து பத்து போட்டிகளை வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து உலக கோப்பையை, இந்திய அணி தவறவிட்டது. எனினும் இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வென்று நிச்சயம் பழி தீர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ட்ராவல்ஸ் ஹெட்டின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய ரசிகர்களின் கனவு தகர்க்கப்பட்டது. கேப்டன் எம்.எஸ் தோனிக்கு பிறகு உலக கோப்பை இந்திய அணிக்கு கனவாகவே உள்ளது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி, உலகக் கோப்பை வெல்லாத நிலையிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதேபோல, ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை செய்ய, ரோகித் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

- Advertisement -

1992ஆம் ஆண்டு முதல், சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி, 23 டெஸ்ட் போட்டிகள் விளையாடி வெறும் நான்கு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை.

முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, 1992 ஆம் ஆண்டு முதல் முறையாக சவுத் ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடிய இந்தியா அணி, 1-0 என தோல்வி அடைந்தது. 1996ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என படுதோல்வி அடைந்தது. 2001ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 1-0 என தோல்வி அடைந்து ஏமாற்றியது.

2006ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணி, சவுத் ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று சாதனை படைத்தது. இருந்த போதிலும் டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. 2010ஆம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி, டெஸ்ட் போட்டி தொடரை 1-1 என சமநிலையில் முடித்தார். இதனால் சவுத் ஆப்பிரிக்கா மண்ணில், முதல் முறையாக டெஸ்ட் போட்டி தொடரை இழக்காத கேப்டன் என்ற பெருமையை பெற்றார். எனினும் மீண்டும் எம்.எஸ் தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. 2017ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டன்ஷிப்பில் சவுத் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை இழந்தது.

தற்போது சவுத் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை சமனிலும், ஒருநாள் போட்டி தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது. இந்த நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

சவுத் ஆப்பிரிக்கா அணியை, அதன் சொந்த மண்ணிலே டெஸ்ட் போட்டி தொடரை வென்றால், ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பிற்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் எனவும், ஐசிசி தொடர்களில் தோல்வி அடைந்ததற்கு ஆறுதலாகவும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரோகித் சர்மா இந்த மகத்தான சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.