“ரோகித் ஒரு செய்தி அனுப்பினார்.. நான் அப்படிதான் விளையாடினேன்.. கடவுளுக்கு நன்றி!” – விராட் கோலி சிறப்பு பேட்டி!

0
16330
Virat

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா அதிரடியாக 26 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். கில் 24 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் ஆட்டம் இழக்க பவர் பிளே முடிந்து சுழற் பந்துவீச்சு வந்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் ஆடுகளத்தில் சிரமம் இருப்பது போல் தெரிந்தது.

இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் மற்றும் விராட் கோலி இருவரும் பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். 20 ஓவர்கள் தாண்டிய பொழுது ரோகித் சர்மா இஷான் கிஷான் மூலம் உள்ளே செய்தி அனுப்பினார்.

செய்தி வந்ததும் மேற்கொண்டு இன்னும் மிக பொறுமையாக இருவரும் விளையாட ஆரம்பித்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்கள். ஸ்ரேயாஸ் 77 ரன்களில் வெளியேற, விராட் கோலி தனது 49 ஆவது சதத்தை அடித்து அசத்தார். முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதத்தில் சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி பேசும் பொழுது “இது பேட்டிங் செய்ய கொஞ்சம் ட்ரிக்கியான விக்கெட். ரோகித் மற்றும் கில் மூலம் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பத்து ஓவர்களுக்கு பின்பு பந்து கிரிப் ஆகி கொஞ்சம் மெதுவாக வர ஆரம்பித்தது.

இதன் காரணமாக மற்றவர்கள் எல்லோரும் என்னை சுற்றி விளையாட நான் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய வேலை. இதுதான் அணி நிர்வாகத்திடம் ( ரோகித் ) இருந்து எனக்கு செய்தியாக உள்ளே வந்தது.

ஸ்ரேயாஸ் நன்றாக விளையாடினார். இறுதியில் நாங்கள் இருவரும் சில முக்கியமான ரன்களை எடுத்தோம். நாங்கள் இருவரும் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் விளையாடுகிறோம். ஆசியக் கோப்பையின் போது நாங்கள் இருவரும் நிறைய பார்ட்னர்ஷிப் மூலம் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வது பற்றி பேசி இருக்கிறோம்.

எங்களிடம் தற்போது ஹர்திக் பாண்டியா இல்லை. எனவே ஒன்று இரண்டு விக்கெட்டுகளை இழப்பது பெரிய பிரச்சினையாகி விடும். எனவே நிலைத்து நின்று விளையாடி போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது.

எனக்கு விளையாட வாய்ப்பு அளித்து, அணியின் வெற்றிக்கு உதவ செய்த கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிறந்தநாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன்னால் சதம் அடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆரம்பத்தில் நாங்கள் ஒரு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் போட்டியை எடுத்துச் செல்ல, வெல்ல அது பெரிய உதவியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!