சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறது. மறுமுனையில் தனது சொந்த சாதனைக்காக விளையாடாத சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 35 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 47 ரன்கள் குவித்தார்.
சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சிமர்ஜீத் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே ஆடுகளத்தின் தன்மையை நன்கு உணர்ந்த சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் இந்த முறை போட்டியை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியில் களமிறங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா கூட்டணியில் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 27 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்கு பின்னர் களமிறங்கிய டேரில் மிச்சல் 13 பந்துகளில் 22 ரன்கள், சிவம் துபே 11 பந்துகளில் 18 ரன்கள், கடைசி கட்டத்தில் சமீர் ரிஸ்வி எட்டு பந்துகளில் 15 ரன்கள் குவித்தனர்.
சீரான இடைவெளியில் சென்னை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்த ருத்ராஜ் ஒரு கேப்டனாக மற்ற பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விட்டு, தான் ஒரு முனையில் நங்கூரம் போல நிலைத்து நின்று போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்றார். 29 பந்துகள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காத ருத்ராஜ் அதற்குப் பின்னர்தான் ஒரு பவுண்டரியையும் இரண்டு சிக்ஸர்களையும் விளாசி சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஐபிஎல் 2024 ஆரஞ்சு கேப்
தற்போது அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கேப்டன் ருத்ராஜ் அவர் நினைத்திருந்தால் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றும் நோக்கத்தில் அதிரடியாக விளையாட போய் சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கலாம். ஆனால் பொறுப்பை உணர்ந்து தனது சுய சாதனையை மனதில் வைத்துக் கொள்ளாமல் அணியின் நலன் கருதி சிங்கிள் ரொட்டேட் செய்து மற்ற பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விட்டு ஆட்டத்தை எடுத்துச் சென்றார்.
இதையும் படிங்க: ஸ்டெம்பில் படாத பந்து.. ஆனாலும் ஜடேஜாவுக்கு ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 661 ரன்களும், சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் 583 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு தற்போது பிரகாசமாக இருக்கிறது. அடுத்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். சென்னை அணி ரசிகர்கள் ருத்ராஜின் கேப்டன் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பெங்களூர் அணியின் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே இது போல கேப்டன் இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள நிலையில் ருத்ராஜூம் தற்போது அதே பாணியில் பின்பற்றி வருவதையும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.