உலகின் நம்பர் 1 டி20 லீக்கான ஐபிஎல் தொடரின் அரசர்களாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன.
இதுவரை நடைபெற்றுள்ள 16 ஐபிஎல் சீசன்களில் இந்த இரு அணிகளும் சேர்ந்து 10 முறை கோப்பையை வென்று இருக்கின்றன. அதுவும் மிகச் சரிசமமாக இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை வென்று இருக்கின்றன.
மேலும் சந்தை மதிப்பு மற்றும் ரசிகர்களின் பலம் என இரு அணிகளும் நெருக்கம் நெருக்கமாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரின் நடுநாயகமாக இருக்கக்கூடிய அணிகளாக இந்த இரு அணிகள் மட்டுமே பல ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரும் இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு எல்லா வகையிலும் மதிப்பு மிக அதிகம். அதிக ரசிகர்கள் பார்ப்பதிலிருந்து, அதிக வருவாயை ஈட்டி தருவது வரை இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது.
இப்படியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய கேப்டன் மகேந்திர சிங் தோனியை மிக உச்சத்தில் வைத்து மரியாதையான முறையில் நடத்திக் கொண்டு வருகிறது. அவர் விரும்பும் வரையில் விளையாடலாம் என்கின்ற அளவுக்கு விட்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு புறம் ஒரு நிறுவனமாக யோசித்து மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக கொண்டு வந்து, ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறது.
இது தற்பொழுது பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. ஒரு மிகச்சிறந்த ஐபிஎல் கேப்டனுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக இது பார்க்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் ரோஹித் சர்மா அணி மாறி விளையாட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரரும், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்பிரமணியம் பத்ரிநாத் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் ” இப்படி இருந்தால்” என்கின்ற தலைப்பில், ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியத்தையும் பரபரப்பையும் கிளப்பி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஒரு வீரர் இப்படியான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்ற காரணத்தினால், இது பல்வேறு யூகங்களையும், விவாதங்களையும் தற்போது சமூக வலைதளத்தில் உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
What If 🤔 #MI #CSK #IPL2024 pic.twitter.com/wmrIauLv4U
— S.Badrinath (@s_badrinath) December 16, 2023