இன்று சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு முன்பாக, ஆர் சி பி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பல விஷயங்கள் தொடர்பாக மனம் திறந்து பேட்டி அளித்து வருகிறார். இதில் தோனி குறித்தும் மிக வெளிப்படையாக நிறைய பேசி இருந்தார். தற்பொழுது ரோகித் சர்மாவை முன்வைத்து ஒரு முக்கிய விஷயத்தை பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் மிக அதிகபட்சம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த ஐபிஎல் தொடராக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் பெரிய சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். உண்மையில் போட்டியில் பந்துவீச்சாளர்கள் இல்லை என்கின்ற அளவுக்கு நிலைமை மிக மோசமாக முதல் பாதியில் சென்றது.
பந்தில் பெரிய அளவில் ஸ்விங் இல்லாதது, அடுத்து ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சாதகமாக உருவாக்கப்பட்டது, மைதானங்கள் சிறிய அளவில் இருப்பது, இத்தோடு இம்பேக்ட் பிளேயர் விதியை கொண்டு வந்தது என எல்லாம் சேர்ந்து, பந்துவீச்சாளர்களுக்கு எந்த விதமான சாதகமும் இல்லாத நிலையை உருவாக்கி, அவர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டது.
இதன் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர் விதியில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் 11 வீரர்களுடன் விளையாடுவதுதான் கிரிக்கெட், இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதால் சிவம் துபே வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் பந்து வீச வாய்ப்பு கிடைப்பதில்லை, இதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆல்ரவுண்டர்கள் கிடைப்பது கடினமாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விராட் கோலி பேசும் பொழுது “நான் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து பேசிய கருத்தில் உடன்படுகிறேன். பொழுதுபோக்கு என்பது விளையாட்டின் ஒரு அம்சம் ஆனால் அது ஆட்டத்தின் சமநிலையை பாதிக்கிறது. பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அல்லது சிக்ஸர் போகும் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதை நான் இதுவரை அனுபவித்ததில்லை. நாம் உயர் மட்ட கிரிக்கெட் விளையாடுகிறோம், எனவே இதில் தனிப்பட்ட யாரும் ஆதிக்கம் செலுத்தும் படி இருக்கக் கூடாது. ஒவ்வொரு அணிக்கும் பும்ரா கிடைக்க மாட்டார்.
இதையும் படிங்க : எங்ககிட்ட நல்ல பிளான் இருக்கு.. ஆர்சிபி இதை செய்யலனா அடுத்த சீசன்தான் – சிஎஸ்கே பிராவோ பேட்டி
நான் உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் சொல்கிறேன், மேல் வரிசையில் பேட்டிங்கில் 200 ஸ்டிரைக் ரேட் உடன் விளையாடுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பேட்டிங் கீழ் வரிசையில் எட்டாவது இடத்தில், இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்பதுதான். இது சமநிலையை சீர்குலைத்து விட்டது என்று நான் நம்புகிறேன். மக்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.