கில், ரோகித், புஜாரா மீண்டும் ஏமாற்றம்… விடாப்பிடியாக நின்று நம்பியளித்த கோலி-ரஹானே ஜோடி! வெற்றி வாய்ப்பு அதிகப்படுத்திய இந்தியா!

0
13924

ரகானே மற்றும் விராட் கோலி இருவரும் உறுதியாக நின்று நம்பிக்கையளிக்க நான்காம் நாள் முடிவில் 164/3 எனும் நிலையில் இந்திய அணி உள்ளது. வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் முதல் இன்னிங்சில் விளையாடி முடித்தபிறகு, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்திருந்தது. இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் துவங்கிய ஆஸ்திரேலியா அணி லபுஜானே விக்கெட்டை துவக்கத்திலேயே இழந்தது. அடுத்ததாக கிரீன்(25), ஸ்டார்க்(41) ஆகியோரும் சிறிது நேரம் களத்தில் நின்று பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்திருந்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் அவுட்டானபின் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்து, 443 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்தது.

இலக்கை துரத்திய இந்திய அணியின் துவக்க ஜோடி கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது, 18 ரன்களில் இருந்த கில் சர்ச்சையான முறையில் அவுட்டானார்.

- Advertisement -

அடுத்த வந்த புஜாரா களத்தில் இருந்த ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் சேர்க்க உதனார். துரதிஷ்டவசமாக ரோகித் சர்மா 43 ரன்களுக்கு அவுட்டானார். அதற்கு அடுத்த ஓவரிலேயே புஜாரா(27) தனது விக்கெட்டை இழக்க, 93 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் விராட்கோலி இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு 4ஆம் நாள் இறுதிவரை இந்திய அணி இன்னொரு விக்கெட்டை இழக்காதவாறு பார்த்துக்கொண்டனர். 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் நிற்க, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி. வெற்றி பெறுவதற்கு இன்னும் 280 ரன்கள் தேவையாக இருக்கிறது.