இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கான முக்கிய காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். அதிலும் தென்னாப்பிரிக்க அணியின் நெட் பவுலர்களைக் கொண்டு பயிற்சி பெறாமல் இந்திய பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தி உள்ளனர். 2010ஆம் ஆண்டு இதே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்போது பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் மூன்று வாரங்களுக்கு முன்பே இந்திய வீரர்களை அழைத்துச் சென்று தென் ஆப்பிரிக்காவில் பயிற்சியை மேற்கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் தென் ஆப்பிரிக்காவில் சாதிக்க வேண்டும் என்றால் அதிக நாட்கள் பயிற்சி மேற்கொண்டு குறைந்தது ஆயிரம் பந்துகளையாவது வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அனுபவ வீரர்களான ரகானே மற்றும் புஜாராவை விடுவித்து இளம் வீரர்களான கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை விளையாட வைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரகானே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு அவர் ஏன் டிராப் செய்யப்பட்டார் என்பது குறித்தும் தெரியவில்லை. வெளிநாட்டு மண்ணில் சீனியர் வீரர்களே அவ்வப்போது தடுமாறி வரும் நிலையில், இளம் வீரர்களைக் கொண்டு தொடரை வென்று விடலாம் என்று பிசிசிஐ நினைத்தது எந்த அளவிற்கு தவறு என்று தற்போது உறுதியாகியுள்ளது.
மேலும் விராட் கோலி, ரவி சாஸ்திரி காலத்தில் விளையாடிய இந்தியாவை போல் தற்போது ரோகித் சர்மா மற்றும் டிராவிட் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது பிசிசிஐக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இக்கூட்டணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 5 தோல்வியும், ஒரு போட்டியில் டிராவும் ஆகியுள்ளது.
விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது களத்தில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையும், மைதானத்திற்கு வெளியே ரவி சாஸ்திரியின் துணிச்சலான முடிவெடுப்பும்தான் தற்போதைய ரோஹித் மற்றும் டிராவிட் கூட்டணியில் மிஸ் செய்யக்கூடிய விஷயங்கள். மேலும் இப்போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பந்து பழையதாக மாறிய போது ரோஹித் சர்மா அஸ்வினை வெறும் 12 ஓவர்கள் மட்டுமே வீசவைத்திருந்தார். அதற்குள் பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர் கூட்டணி 32 ஓவர்கள் வீசி 171 ரன்கள் கொடுத்துள்ளனர்.
மேலும் புதிய பந்தில் சிராஜ், பும்ரா கூட்டணி 7 ஓவர்களை மட்டுமே வீசியது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தும் ரோஹித் சர்மா டெஸ்டில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறுகிறார். தரமான பேட்டிங் கூட்டணியும், மூன்றாவது திறமையான வேகப்பந்துவீச்சாளர் இல்லாததுமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி சரி செய்து அடுத்த போட்டியில் வெற்றி பெறுவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.