இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் ஸ்ரீகாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்டதற்காக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கு ராபின் உத்தப்பா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மைக்கேல் கிளார்க் தன்னுடைய யூடியூப் சேனலில் முன்னாள் ஐபிஎல் சேர்மேன் லலித் மோடியை பேட்டி எடுத்தார். அதில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஐபிஎல் தொடர் ஒன்றில் அறைந்த முழு வீடியோவை வெளியிட்டார். இது இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு குறித்து ஹர்பஜன் சிங் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகிறார். தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது எனவும், இது தன் குழந்தை முன்னே தனக்கு தலைக் குனிவை ஏற்படுத்துவதாகவும், இதற்காகத்தான் மிகவும் அவமானப்படுவதாகவும் தன் தவறை உணர்ந்து பேசி வருகிறார்.
அதே சமயத்தில் ஹர்பஜன்சிங் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் மீண்டும் பேசி சிறந்த நட்பு முறைக்கு மாறி விட்டார்கள். இப்படியான நிலையில்தான் லலித் மோடியை மைக்கேல் கிளார்க் அந்த குறிப்பிட்ட வீடியோவை வெளியிட வைத்தார். இது குறித்து தற்பொழுது ராபின் உத்தப்பா விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது “இதுவே நாங்கள் இப்பொழுது ஒரு ஆஸ்திரேலியா வீரரின் இது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தால் என்ன நடக்கும்? அந்த வீடியோ சூழ்நிலையின் மரியாதையை காப்பாற்றுவதற்காக மறைக்கப்பட்டிருந்தது. இப்போது அவசரமாக நேர்மையில்லாமல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். நீங்கள் ஒரு மனிதரை அணுகி அந்த வீடியோவை வெளியிட கேட்டு இருக்கிறீர்கள். 20 வருடங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடத்தில் தள்ள உங்களுக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறீர்களா?”
இதையும் படிங்க : அயர்லாந்து டி20.. இங்கிலாந்து செய்த சம்பவம்.. ஆர்சிபி பையன் கேப்டன்.. புது அணி அறிவிப்பு
“மற்றவர்கள் குறித்து உங்களின் அக்கறை எங்கே போனது? நாம் எல்லோரும் தான் தவறு செய்கிறோம். ஆனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய தவறுக்காக மக்களிடம் தொடர்ந்து அவமானப்பட வேண்டுமா? இந்த வீடியோவை வெளியிட்டால் உங்களுக்கு அதிக வியூஸ் கிடைக்கும் என்பதற்காக இந்த முட்டாள்தனத்தை மக்கள் முன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.