நடப்புச் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் மட்டும் விளையாடுவது சாதகத்தை கொடுத்து வருகிறது என வெளிநாட்டு வீரர்கள் செய்து வரும் விமர்சனத்திற்கு இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பதிலடி கொடுத்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வென்று செமி பைனலுக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் செமி பைனலில் ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா இரண்டில் ஒரு அணியை துபாயில் சந்தித்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி மீதான விமர்சனம்
தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடாத காரணத்தினால் ஹைபிரிட் மாடலில் துபாயில் விளையாடுகிறது. ஆனால் சார்ஜா அபுதாபி என எந்த ஒரு இரண்டாவது மைதானத்திற்கும் இந்திய அணி செல்லவில்லை. இதனால் இந்திய அணிக்கு பயண அலைச்சல் என்று எதுவுமே இல்லாததும், ஒரே மைதானத்தில் விளையாடி பழக்கப்படுவதும் பெரிய நன்மையை உருவாக்குவதாக வெளிநாட்டு வீரர்கள் புகார் செய்து வருகிறார்கள்.
இது குறித்து பேசி இருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “பாகிஸ்தானின் தட்டையான ஆடுகளங்களில் விளையாட முடிந்திருந்தால் இந்தியா இன்னும் பல சாதனைகளை செய்திருக்க முடியும் என்று இந்தியாவும் புகார் கூற முடியும். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் சதம் அடிக்கும் அதிகபட்ச வாய்ப்பை பெற்றிருப்பார்கள். நீங்கள் என்ன புகார் சொன்னாலும் அன்றைய குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே வெல்வார்கள்”
இந்திய அணிக்கு இந்த உரிமை உள்ளது
“இந்திய அணிக்கு ஒரே இடத்தில் விளையாடுவதால் நன்மை கிடைக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவது கொஞ்சம் பரீட்சயத்தை உண்டாக்குகிறது. மேலும் சார்ஜா அபுதாபி என்று வேறு மைதானங்களில் விளையாடி இருக்கலாம் என வாசிம் ஜாபர் பேசியிருந்ததை நான் கேட்டேன்”
இதையும் படிங்க : 10 வருஷத்துல ஆப்கான் உலகக் கோப்பையை ஜெயிப்பீங்க.. ஆனா நான் சொல்ற இத செய்யுங்க – டேல் ஸ்டைய்ன் அறிவுரை
“புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக ஒரு அணி இன்னொரு நாட்டிற்கு சென்று விளையாட முடியாது என்று கூற அனைத்து உரிமைகளும் இருக்கிறது. இதற்காக ஒரு அணி ஒரே இடத்தில் விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தால், அந்த அணி ஒரே இடத்தில் விளையாடட்டும், அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.






