ரிஷப் பண்ட் மருத்துவ அறிக்கை வெளியானது.. எத்தனை காயங்கள்? இப்போது எப்படி இருக்கிறார்?

0
26021

ரிஷப் பண்ட்-டிற்கு பிசிசிஐ சார்பில் அனைத்து உதவிகளும் உரிய நேரத்தில் கிடைக்கும் என்று ட்வீட் செய்திருக்கிறார் ஜேய் ஷா.

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், வெள்ளிக்கிழமை அதிகாலை ரூர்க்கி அருகே சாலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது இப்படி நேர்ந்துள்ளது.

- Advertisement -

டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நெற்றி பகுதியில் இரண்டு வெட்டு காயங்கள், வலது கை மூட்டுப்பகுதி மற்றும் மணிக்கட்டு இரண்டிலும் காயம், காலில் ஜவ்வு கிழிந்துள்ளது மற்றும் முதுகு பகுதியில் கீறல்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருக்கின்றனர்.

இவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து ட்விட்டரில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். முழு கண்காணிப்பில் இருப்பார். என்ன தேவையோ, அனைத்தும் கிடைக்கும் என்று பிசிசிஐ சார்பில் ட்வீட் செய்துள்ளார் செயலாளர் ஜேய் ஷா.

- Advertisement -

“படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டிற்கு எனது பிரார்த்தனைகள். விபத்து பற்றி அவரது குடும்பத்தினரிடம் பேசினேன். தற்போது ஆபத்திலிருந்து அவர் வெளிவந்துவிட்டார். மருத்துவர்கள் உரிய சிகிச்சைகளை கொடுத்து வருகின்றனர். சிகிச்சை கொடுத்து வரும் மருத்துவர்களிடமும் நான் பேசினேன். என்னென்ன தேவையோ அனைத்தும் உரிய நேரத்தில் கிடைக்கும். பிசிசிஐ அவர் பக்கம் இருக்கிறது. விரைவில் குணமடைந்து வர வேண்டும்.” என ட்வீட் செய்திருந்தார்.