தற்போது தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டுமென பல பக்கம் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் இந்நாள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாளை சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. சிஎஸ்கே நான்கில் மூன்று போட்டிகளை தோற்று இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் மூன்றில் இரண்டு போட்டிகளை வென்று இருக்கிறது. இருந்தபோதிலும் பஞ்சாப் கிங்ஸ் கடைசி போட்டியில் தங்களது சொந்த மைதானத்தில் முதல் முறையாக விளையாடி தோற்றது. எனவே இரு அணியும் வெற்றி பெற கடுமையாக போராடும்.
தோனி ஓய்வு பெற வேண்டும்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் 10 ஓவர்கள் தாண்டி தோனி சீக்கிரத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இருந்த போதும் அவரால் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை. ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது போல மிகவும் மெதுவாக விளையாடினார். அவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது சிஎஸ்கே ரசிகர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.
இதற்குப் பிறகு வெளியில் வந்த ரசிகர்களில் சிலர் சாலையில் இருந்த பேட்டி எடுப்பவர்களிடம் தோனி ஓய்வு பெறுவது நல்லது என்கின்ற கருத்துக்களை தெரிவித்தார்கள். தோனியின் புகழ் சரிய ஆரம்பித்து இருப்பதாகவும், எனவே அவர் சுதாரித்து உடனடியாக ஓய்வு பெற வேண்டும் எனவும் வெளியில் இருந்து கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
தோனியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “தோனியின் விக்கெட் கீப்பிங் மோசம் அடையவில்லை. எனக்கு தெரிந்த ஒன்று என்னவென்றால் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் கீப்பராக எதையும் தவறவிடவில்லை. எப்போதும் போல அவர் சிறப்பாக இருந்தார். நீங்கள் சிஎஸ்கே அணி குறித்து எதையும் விவாதிக்க போவது இல்லை ஏனென்றால் அவர்கள் இங்கு நிறைய சாதித்திருக்கிறார்கள்”
இதையும் படிங்க : சிஎஸ்கே மேட்ச் பத்தி பேசாதீங்க.. அஸ்வின் தன் யூடியூப் சேனலுக்கு உத்தரவு.. காரணம் என்ன?
“அவர்கள் நீண்ட காலமாக சிறந்த பயிற்சி பெற்று இருக்கிறார்கள். எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். தோனி சில பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய மிகச்சிறந்த பால்-ஸ்ட்ரைக்கராக இருக்கிறார். கடைசியில் 10 முதல் 12 பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய வகையில் தன்னை சில ஆண்டுகளாக சுருக்கி கொண்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் தோனி இன்னுமே ஆபத்தானவர்தான்” என்று கூறி இருக்கிறார்.






