நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் குறித்து இனி தன்னுடைய யூடியூப் சேனலில் யாரும் பேச மாட்டார்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். தற்போது அவருடைய இந்த தடை பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த முறை சிஎஸ்கே அணி மெகா ஏலத்திலேயே மிகவும் மோசமாக வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு முதல் நான்கு போட்டியிலேயே அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டது. ஆனால் வீரர்கள் அனைவரும் நம்பிக்கையும், பார்மும் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள். இதனால் சிஎஸ்கே அணியை சுற்றி நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது.
எங்கிருந்து ஆரம்பித்தது பிரச்சனை?
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு விளையாடி வருகிறார். இதனால் அவருடைய யூட்யூப் சேனலில் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகும் வரக்கூடிய பகுப்பாய்வு நிகழ்ச்சியை நடத்துவதற்கு மூன்று பேரை நியமித்திருந்தார். இதில் இருவர் சொன்ன கருத்துகள்தான் தற்போது பிரச்சினையாகி இருக்கிறது.
சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அனலைசர் பிரசன்னா நூர் அகமதை வாங்கி இருக்கக் கூடாது, மதிஷா பத்திரனாவை விளையாட வைக்க கூடாது, ருதுராஜ் மூன்றாவது இடத்தில் களமிறங்க கூடாது என அதிரடியான கருத்துக்களை தெரிவித்தார். இதனால் குதிப்படைந்த ரசிகர்கள் முதலில் அஸ்வினையே வாங்கி இருக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் சிஎஸ்கே திறனறியும் குழுவில் இருக்கும் வித்யூத் தாங்கள் நல்ல இளம்வீரர்கள் பெயரை எழுதிக் கொடுத்தும் சிஎஸ்கே வாங்கவில்லை என்று கூறியிருந்தார். இதுவெல்லாம் அப்போதே பெரிய பிரச்சினையாக மாறியது.
தடை போட்ட அஸ்வின்
இப்படியான நிலையில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள் குறித்த வீடியோக்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் இடம்பெறாது என ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று வெளிப்படையாக அறிக்கை கொடுத்திருக்கிறார். அதே சமயத்தில் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : CSK vs PBKS.. மாறும் உத்தேச பிளேயிங் XI.. தோனி அஸ்வின் ஆடுவார்களா?.. ருதுராஜுக்கு சிக்கல்
சிஎஸ்கே அணியைச் சுற்றி நிறைய கருத்துக்கள் சென்று கொண்டிருப்பதால், இவ்வாறான முடிவை எடுக்க வேண்டி இருப்பதாகவும், ஆனால் தாங்கள் எப்பொழுதும் நேர்மையான முறையில் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து மாற மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் மற்ற அணிகளை விமர்சிப்பீர்கள் ஆனால் சிஎஸ்கே அணியை விமர்சிக்க மாட்டீர்களா? என ரசிகர்கள் அஸ்வின் முடிவுக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.






