ரெக்கார்ட் பிரேக் ஆசிய கோப்பை!.. ஜடேஜா குல்தீப் புதிய அசத்தல் சாதனை.. தொடரும் பட்டியல்!

0
896
Jadeja

இந்திய அணி திடீரென்று ஒரு புதிய எழுச்சியைக் கண்டு இருக்கிறது. பேட்டிங் யூனிட்டில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் மின்னுகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் பந்துவீச்சு யூனிட்டை எடுத்துக் கொண்டால், காயத்திலிருந்து திரும்ப வந்த பும்ரா தன்னை முழுவதுமாக நிரூபித்திருக்கிறார். அவருடன் இன்னொரு முனையில் நிற்கும் முகமது சிராஜ், உலகத்தரமான வேகப்பந்து வீச்சை வெளிக்காட்டுகிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் வெள்ளைப்பந்து போட்டிகளை வெல்வதற்கு ஆட்டத்தின் நடுவரிசையில் வீசப்படும் ஓவர்கள் சிறப்பாக அமைவது மிகவும் முக்கியமாகும். இந்த வகையில் ஒவ்வொரு அணிக்கும் சுழற் பந்துவீச்சாளர்கள் அவசியம்.

இந்த வகையில் இந்திய அணியில் எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ் பந்துவீச்சு எதிரணியினரை பயப்படும் வகையில் செய்திருக்கிறது. அவர் ஒரே ஆக்ஷனில் கூக்ளியையும் வீசுவது பேட்மேன்களால் கணிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப முக்கிய விக்கெட்டுகள் இரண்டை கைப்பற்றிய அவர், இறுதியில் மூன்று பந்தில் இரண்டு விக்கெட் கைப்பற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றினார். நேற்றைய போட்டியின் மூலமாக குறைந்த இன்னிங்ஸ்களில் 150 ஒருநாள் விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இது உலக அளவில் நான்காவது இடமாகும்.

- Advertisement -

பாகிஸ்தானின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் வீரர் சக்லைன் முஸ்டாக் 74 இன்னிங்ஸ், ஆப்கானிஸ்தானின் தற்போதைய வீரர் ரசித் கான் 80 இன்னிங்ஸ், இலங்கை அணியின் அஜந்தா மெண்டிஸ் 84 இன்னிங்ஸ்களில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் நடுவரிசையில் ஓவர்கள் வீசும் இந்திய அணியின் விரல் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும், தற்பொழுது பந்துவீச்சில் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். நேற்றைய போட்டியில் இலங்கை கேப்டன் சனகா மற்றும் தனஞ்செய டி சில்வா விக்கெட்டுக்களை முக்கியமான நேரத்தில் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் ஆசியக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்திருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மொத்தம் 24 விக்கெட் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். 22 விக்கெட்கள் உடன் இர்பான் பதான் இரண்டாவது இடத்திலும், 17 விக்கெட்டுகள் உடன் சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.