பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரராக தனிச் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா, நடப்பு போட்டி குறித்தும் தனது சாதனை குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டு இருந்தது. இப்படியான சூழ்நிலையில் இன்று இந்திய அணி 34 ஓவர்கள் மட்டுமே விளையாடி மொத்த ஆட்டத்தையும் மாற்றி போட்டிக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
பங்களாதேஷ் இந்தியா முதல் இன்னிங்ஸ்
பங்களாதேஷ் அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுத்தது. இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி வெறும் 34.4 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து அதிரடியாக டிக்ளர் செய்தது. இதனால் திடீரென போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வந்த பங்களாதேஷ் அணி நான்காம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து 26 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. நாளை எவ்வளவு சீக்கிரத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை சுருட்டுகிறதோ, அவ்வளவு அதிகமான வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனாலும் இந்த முடிவு நோக்கி நகர்த்தியதே பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திர ஜடேஜா சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முன்னாள் ஆல் ரவுண்டர் இயான் போத்தமுக்கு பிறகு மூன்றாயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட் கைப்பற்றிய வீரராக ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்தார்.மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடதுகை சுழல் பந்து வீச்சாளராக 300 விக்கெட் கைப்பற்றியும் சாதனை படைத்தார்.
இதுகுறித்து போட்டிக்கு பின் பேசிய ரவீந்திர ஜடேஜா “300 டெஸ்ட் விக்கெட் என்பது சிறப்பானது. நான் 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இறுதியாக இந்த நிலையை எட்டி இருக்கிறேன். இப்பொழுது என்னை நான் பெருமையாக உணர்கிறேன். இந்திய ஜெர்சியை அணியும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பேன். நான் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடி ஆரம்பித்ததால் அந்த வடிவத்தில் என்னை ஸ்பெஷலிஸ்ட் என்று சொன்னார்கள்”
இதையும் படிங்க : 18 விக்கெட்.. 2 வரலாற்று உலக சாதனைகள்.. 34 ஓவரில் உயிர் வந்த மேட்ச்.. அஸ்வின் ஆட்டம் ஆரம்பம்
“படிப்படியாக நான் எனது விளையாட்டை மேம்படுத்தினேன். அதை இப்போது எனக்கு பலனளித்து இருக்கிறது. நான் பேட்டிங் செய்ய செல்லும் பொழுது கொஞ்சம் நிலைமையை புரிந்து கொள்ள பந்துகளை செலவு செய்து களத்தில் நிற்க வேண்டும். மேலும் பந்துக்கு தகுந்தபடி நான் விளையாட கூடியவன். தற்போது நாங்கள் நன்றாக பேட்டிங் செய்திருக்கிறோம். எப்படி விளையாடி முடித்திருக்கிறோமோ அப்படித்தான் திட்டமிட்டோம். எனவே நாங்கள் திட்டமிட்டபடி சரியாக செய்திருக்கிறோம். நாளை முடிந்தவரை விரைவில் அவர்களை ஆல் அவுட் செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.