நடந்து கொண்டிருக்கும் 3வது டெஸ்டில் இருந்து அஷ்வின் திடீர் விலகல்.. பிசிசிஐ அவசர அறிவிப்பு

0
1119
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி இரண்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

அந்த அணியின் இடது கை பேட்ஸ்மேன் பென் டக்கெட் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். உடன் ஜோ ரூட் 9 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.

ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் நிலையில் தற்பொழுது இங்கிலாந்து அணி மிகவும் பலமான நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆனால், இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று விடும் சூழலே நிலவுகிறது.

- Advertisement -

இப்படியான நிலையில் இன்று ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கும் அனுபவ நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தேவை மிக அதிகமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருக்கிறது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே போட்டியை விட்டு விலகி இருக்கிறார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசர மருத்துவ சூழல் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுகிறார். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த சவாலான நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அணி அவருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறது.

சாம்பியன் கிரிக்கெட் வீரரான அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நாங்கள் இதயபூர்வமான முழு ஆதரவையும் வழங்குகிறோம். வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது. நாங்கள் அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -