மீண்டும் இந்திய அணிக்காக ஓடிஐயில் களமிறங்கும் அஷ்வின் – தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியீடு

0
3104
Ruthuraj Gaikwad and Ravichandran Ashwin

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் ஜனவரி 19 முதல் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாக இருக்கிறது.

ஒருநாள் தொடரில் களம் இறங்கப் போகும் வீரர்கள் பட்டியலை கூடிய விரைவில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவுள்ள நிலையில், அணியில் இடம் பிடிக்க போகும் வீரர்கள் பட்டியல் தற்போது முன்கூட்டியே வெளியாகியுள்ளது. அதில் அஸ்வின் பெயர் இடம் பெற்றுள்ள செய்தி இந்திய ரசிகர்கள் அனைவரையும் சந்தோஷம் அடையச் செய்துள்ளது.

- Advertisement -

மீண்டும் இந்திய அணியில் இணையப்போகும் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் எவ்வாறு சிறப்பாக விளையாடுவாரோ, அதே அளவுக்கு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுவார். 2010ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் விளையாட தொடங்கிய அவர், கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.

111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை தன் கைவசம் வைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அவருடைய எக்கானமி விகிதம் 4.92 மட்டுமே. அப்படி இருக்க ஏன் அவரை ஒரு நாள் போட்டியில் இந்திய அணி விளையாட வைப்பது இல்லை என்கிற கோபம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கரை வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் பழையவாறு ஒருநாள் போட்டிகளில் விளையாட போகும் செய்தி இந்திய ரசிகர்கள் அனைவரையும் பேரின்பம் அடையச் செய்துள்ளது.

இந்திய அணியில் இடம்பிடிக்க போகும் மற்ற வீரர்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே நீண்ட நாட்கள் கழித்து சஹால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ளார். அதேபோல இளம் வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பிடிக்க போகும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அணியில் ஷிகர் தவான் பெயர் இடம்பெறப்போகும் செய்தியும் ஏறக்குறைய தற்பொழுது உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ரோஹித் ஷர்மா பூரண உடல் நலத்துடன் இருக்கும் பட்சத்தில் இந்திய அணியை அவர் கேப்டனாக வழிநடத்துவார். இல்லையெனில் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற செய்தியும் கூடுதலாக கிடைத்துள்ளது.